காற்று மாசுபாட்டை தடுக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் கருத்தரங்கில் துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் பேச்சு

காற்று மாசுபாட்டை தடுக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

Update: 2018-07-31 23:45 GMT

பெங்களூரு,

காற்று மாசுபாட்டை தடுக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சி–40 குளோபல் தரமான காற்று அமைப்பு ஆகியவை சார்பில் கருத்தரங்கு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:–

கடந்த 30 ஆண்டுகளில் ஒட்டுமொத்த உலகின் வரைபடம் மாறியுள்ளது. உலகமயமாக்கலுக்கு பிறகு அதிகளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுச்சூழல் பாதிப்பு, காற்று மாசுபாடு மிக அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசு 60 மில்லியன் யூனிட்டுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. ஆனால் காற்று மாசுவின் அளவு டெல்லியில் 292 மில்லியன் யூனிட், பரிதாபாத்தில் 272 மில்லியன் யூனிட், வாரணாசியில் 262 மில்லியன் யூனிட்டாக இருக்கிறது.

பெங்களூருவின் மக்கள்தொகை

கட்டுக்குள் இருக்க வேண்டிய அளவை விட காற்று மாசுபாடு அதிகமாக உள்ளதால் அந்த மாநிலங்கள் பெரும் பிரச்சினையை சந்தித்து வருகின்றன. இதில் மகிழ்ச்சி அடைய வேண்டிய வி‌ஷயம் என்னவென்றால், அதிக காற்று மாசுபாடு ஏற்படும் முதல் 10 நகரங்களின் பட்டியலில் பெங்களூரு இல்லை என்பதே. அதே நேரத்தில் காற்று மாசு இல்லாத பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் பெங்களூரு இடம் பெறவில்லை. இது நமக்கு ஆதங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

காற்று மாசுவில் 60 மில்லியன் யூனிட்டுக்குள் இருக்கும் நகரங்களில் மண்டியா, மங்களூரு, பத்ராவதி ஆகியவை இருக்கின்றன. அந்த நகரங்களில் காற்று மாசு சமநிலையில் இருக்கின்றன. பெங்களூரு நகரம் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்துள்ளது. மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாக இருந்த பெங்களூருவின் மக்கள்தொகை தற்போது 36 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கட்டமைப்பு வசதிகள்

நகரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால் காற்று மாசுபாடும் சற்று அதிகரித்துள்ளது. நான் மாணவராக இருந்தபோது பெங்களூருவில் எங்கு பார்த்தாலும் மரங்கள் தான் இருக்கும். நகரம் தூய்மையாக இருந்தது. நகரில் வெப்பநிலை மிக அதிகம் என்றால் 27 டிகிரி இருக்கும். இதனால் மற்ற மாநிலங்கள் மற்றும் நமது மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் பெங்களூருவை நோக்கி வந்து குடியேறினர்.

இதன் காரணமாக பெங்களூருவின் இன்றைய மக்கள்தொகை 1.30 கோடியாக அதிகரித்து உள்ளது. நகரில் தினமும் 72 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. காற்று மாசுபாட்டை தடுக்க வேண்டியது அவசியம் இல்லாவிட்டால் வரும் காலத்தில் பெரிய பிரச்சினைகள் உண்டாகும். காற்று மாசுபாட்டை தடுக்க புதிய சட்டம் ஒன்றை இயற்ற வேண்டியது அவசியம்.

போக்குவரத்து பிரச்சினையை...

காற்று மாசுபாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாசுபாட்டை இப்போது நாம் தடுக்காவிட்டால் வரும் காலத்தில் நாம் பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். பள்ளிகளில் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெங்களூருவில் போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம். இதன் மூலமும் காற்று மாசுபாடு அடைவது குறையும்.

மொத்தத்தில் அமைதியான, காற்று மாசுபாடு இல்லாத நகரமாக பெங்களூருவை மாற்ற வேண்டும். இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்படும் அம்சங்களை ஒருங்கிணைத்து காற்று மாசுபாடு தடுப்பு குறித்து அரசுக்கு அறிக்கை வழங்க வேண்டும். அந்த அறிக்கையில் கூறப்படும் அம்சங்களை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.

இந்த கருத்தரங்கில் மேயர் சம்பத்ராஜ், துணை மேயர் பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்