மராத்தா சமுதாயத்தினரை தொடர்ந்து தங்கர் சமுதாயத்தினர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் இன்று முதல் நடத்துகிறார்கள்

மராத்தா சமுதாயத்தினர் இடஒதுக்கீடு கேட்டு போராடி வரும் நிலையில், தங்கர் சமுதாயத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கவேண்டி இன்று முதல் போராட்டத்தில் குதிக்கின்றனர்.

Update: 2018-07-31 22:30 GMT
மும்பை, 

மராத்தா சமுதாயத்தினர் இடஒதுக்கீடு கேட்டு போராடி வரும் நிலையில், தங்கர் சமுதாயத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கவேண்டி இன்று முதல் போராட்டத்தில் குதிக்கின்றனர்.

இடஒதுக்கீடு

மராட்டியத்தின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் உள்ள மராத்தா சமுதாயத்தினர் கல்வி, வேலை வாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பயங்கர வன்முறைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

மராத்தா சமுதாயத்தினரின் இடஒதுக்கீடு போராட்டம் மாநிலத்தை உலுக்கி வரும் நிலையில், மராட்டியத்தில் 10 முதல் 12 சதவீதம் மக்கள் தொகை உள்ளதாக கூறப்படும் தங்கர் சமுதாயத்தினர் தங்களை பழங்குடியினர் (எஸ்.டி.) பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முழக்கத்தை மாநில அரசுக்கு முன் வைத்து உள்ளனர்.

இன்று முதல் போராட்டம்

இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் இன்று (புதன்கிழமை) போராட்ட களத்தில் குதிக்க முடிவு செய்து உள்ளனர். இதன்படி இன்று மாநிலம் முழுவதும் பிரமாண்ட பேரணிகளை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இதுபற்றி யஸ்வந்த் கிராந்தி சேனா அமைப்பின் தலைவர் கோபிசந்த் பாடல்கர் கூறுகையில், மற்ற மாநிலங்களில் தங்கர் மற்றும் தன்காட் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் பட்டியலின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

பீகார், ஜார்கண்ட், ஒடிசா மாநில அரசுகள் தங்கர் சமுதாயத்தினருக்கு எஸ்.டி. பட்டியலின் கீழ் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு தீர்மானம் அனுப்பி வைத்து உள்ளன.

இதேபோல மராட்டிய அரசும் மத்திய அரசுக்கு தீர்மானம் அனுப்ப வேண்டும். எங்கள் சமுதாயத்தை எஸ்.டி. பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கும் வரை ேபாராடுவோம், என்றார்.

7 சதவீதம்

தற்போது, தங்கர் சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 3½ சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும் போது 7 சதவீத இடஒதுக்கீடு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினை தீர்க்கப்படாமல் பூதாகரமாகி வரும் நிலையில், தங்கர் சமுதாயத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதுடன், மராட்டிய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்