கார் மீது லாரி மோதல்; பெண் பலி மூதாதையர்களுக்கு திதி கொடுக்க சென்ற போது பரிதாபம்

தொப்பூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுக்க சென்ற பெண் உடல் நசுங்கி பலியானார்.

Update: 2018-07-31 22:15 GMT
நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் சீராம்பட்டியை சேர்ந்தவர் முத்து (வயது 60), விவசாயி. இவர் தனது மூதாதையர்களுக்கு திதி கொடுப்பதற்காக நேற்று முன்தினம் இரவு காரில் மனைவி சின்னப்பொன்னு (55) மற்றும் மகன்கள் ரமேஷ், விக்னேஷ், மருமகள்கள், பேரன் பேத்திகள் என 10 பேருடன் ராமேசுவரத்திற்கு புறப்பட்டார். இந்த காரை கொண்டம்பட்டியை சேர்ந்த டிரைவர் சத்தியமூர்த்தி என்பவர் ஓட்டி சென்றார்.

தொப்பூர் இரட்டை பாலம் பகுதியில் பின்னால் வந்த லாரியின் சக்கரம் கழன்றது. இதனால் தாறுமாறாக ஓடிய லாரி, முன்னால் சென்ற கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் சென்ற சின்னப்பொன்னு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும் முத்து, ரமேஷ், விக்னேஷ், டிரைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் விரைந்து சென்று இறந்த சின்னப்பொன்னுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திதி கொடுக்க சென்ற போது விபத்தில் பெண் இறந்ததால் அந்த கிராமம் சோகத்தில் மூழ்கியது. 

மேலும் செய்திகள்