சாயப்பட்டறைகள் மூடப்பட்டதால் கஞ்சி தொட்டி திறக்கும் நிலைக்கு தள்ளப்படும் நெசவாளர்கள்

சாயப்பட்டறைகள் மூடப்பட்டதால் கஞ்சி தொட்டி திறக்கும் நிலைக்கு நெசவாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Update: 2018-07-31 22:30 GMT

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் பெரிய புளியம்பட்டி, திருநகரம், வெள்ளைக்கோட்டை, சொக்கலிங்கபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 25 ஆயிரம் நெசவாளர் குடும்பங்கள் பல தலைமுறைகளாக கைத்தறி நெசவு தொழில் செய்து வந்தனர். நாளடைவில் கைத்தறி தொழில் நலிவடைந்ததால் நெசவாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் நிலை உருவானது. பின்னர் படிப்படியாக நெசவாளர்கள் விசைத்தறி தொழிலுக்கு மாறினர்.

நெசவாளர்கள் சேலை உற்பத்திக்கு தேவையான நூல் ரகங்களை அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள நூற்பாலைகளில் வாங்கி சாயம் போட்டு தயாரித்து வந்தனர். இங்கு தயாரிக்கப்பட்ட சேலை ரகங்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மட்டுமின்றி ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்து விரும்பி வாங்கிச் சென்றனர்.

இந்த நிலையில் சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கண்மாயில் கலப்பதால் நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு வந்த புகாரை அடுத்து இரவோடு இரவாக 35–க்கும் மேற்ப்பட்ட சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர்.

 இது குறித்து சிறிய சாயச்சாலை உரிமையாளர்கள் கலெக்டர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து தங்களின் நிலை குறித்தும், நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டடுள்ளதாக கூறி முறையிட்டனர். கடந்த 10 நாட்கள் ஆகியும் இதற்கான தீர்வை அரசு காணவில்லை.

 இது குறித்து சிறு சாயச்சாலை சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் சவுண்டையா கூறுகையில், எங்களது நெசவாளர் குடும்பங்கள் நெசவு தொழிலையே பல தலைமுறைகளாக செய்து வருகிறார்கள். நாங்கள் பயன்படுத்தும் சாயப்பவுடர் வீரியம் குறைவானது. அதனால் தான் எங்களது கைகளாலேயே இப்பணிகளை செய்து வருகிறோம். இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூர், தளவாய்புரம், சங்கரன்கோவில், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் சாயச்சலைகள் தடையின்றி இயங்கி கொண்டு தான் இருக்கிறது. எங்களது சாயப்பட்டறையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இதனை சில வருடங்களுக்கு முன்பு நகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வுகூட்டத்தில் எங்களது நெசவாளர்கள் செயல்முறை விளக்கம் அளித்து காட்டினர். இந்த நிலையில் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள 35–க்கும் மேற்பட்ட சாயச்சாலைகளின் மின் இணைப்பை துண்டித்துள்ளனர். ஒரு சில இடங்களில் சாயச்சாலைகளுடன் நெசவாளர்கள் குடியிருப்பும் சேர்ந்து உள்ளது. மின் இணைப்பு துண்டிப்பால் அவரது குடும்பங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி 3 மாதங்களில் நகரில் உள்ள சாயச்சாலைகள் அனைத்தையும் ஊருக்கு வெளியில் உள்ள ஓரிடத்தில் சுத்திகரிப்பு நிலையமாக அமைத்து அந்த பணிகளை மேற்கொள்ள கூறி வருகின்றனர். மேலும் சாயச்சாலை அமைப்பதற்கு சாயச்சாலை உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் பாண்டு பத்திரத்தில் கையொப்பமிட்டு கொடுத்தால் மட்டுமே மீண்டும் மின் இணைப்பு கொடுப்பதற்கு அனுமதி அளிப்பேன் என்று மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர். அவ்வாறான சாயச்சாலைகளை அமைப்பதற்கு சுமார் ரூ.5 கோடி செலவாகும். அதற்கான நிதியும் எங்களிடம் இல்லை. கடந்த 10 நாட்களாக சாயச்சாலை இயங்காததால் நெசவாளர்களுக்கு சேலை உற்பத்தி செய்ய நூல்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் சில தினங்களில் விசைத்தறி நெசவாளர்கள் நூல்கள் இல்லாமல் நெசவு தொழில் முடங்கும் நிலை உருவாகும். அரசு தலையிட்டு முடங்கியுள்ள நெசவு தொழிலை பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் நெசவாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு மீண்டும் கஞ்சி தொட்டி திறக்கும் நிலை உருவாகும் என்று கூறினர்.

மேலும் செய்திகள்