சத்தியமங்கலத்தில் துப்பாக்கி உரிமம் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனச்சரகருக்கு 3 ஆண்டு ஜெயில்

சத்தியமங்கலத்தில் துப்பாக்கி உரிமம் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனச்சரகருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-07-31 23:00 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வரப்பாளையம் எம்மாம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு இரவு நேர காவலாளியாக இருந்தார். இதற்காக அவர் துப்பாக்கி உரிமம் கேட்டு கடந்த 2005–ம் ஆண்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதுதொடர்பாக அனுமதி கடிதம் கொடுப்பதற்கான விசாரணை சத்தியமங்கலத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது வனச்சரகராக இருந்த விஸ்வநாதன் என்பவர் பாலசுப்பிரமணியத்திடம் துப்பாக்கி உரிமத்தின் அனுமதி கடிதம் கொடுக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு உள்ளார்.

ஆனால் லஞ்சம் தர விரும்பாத பாலசுப்பிரமணியம் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் கொடுத்த அறிவுரையின் பேரில் கடந்த 12–9–2005 அன்று சத்தியமங்கலம் வன அலுவலகத்தில் வனச்சரகர் விஸ்வநாதனிடம் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்தை லஞ்சமாக பாலசுப்பிரமணியம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஸ்வநாதனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் வனத்துறை சார்பில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது ஈரோடு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு மோகன் நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் அவர், விஸ்வநாதனுக்கு லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 1 ஆண்டு ஜெயிலும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அரசுப்பணியை முறையாக செய்யாமல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 3 ஆண்டு சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து இருந்தார். மேலும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறி இருந்ததால் விஸ்வநாதனுக்கு மொத்தம் 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் அரசு வக்கீல் சம்பத் ஆஜரானார்.

மேலும் செய்திகள்