சிங்கம்புணரியில் ஏ.டி.எம். எந்திரங்கள் செயல்படாததால் வாடிக்கையாளர்கள் தவிப்பு

சிங்கம்புணரியில் ஏ.டி.எம். எந்திரங்கள் செயல்படாததால் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் தவித்து வருகின்றனர்.

Update: 2018-07-31 21:45 GMT

சிங்கம்புணரி,

வளர்ந்து வரும் நகராக விளங்கும் சிங்கம்புணரி தற்போது தாலுகா அந்தஸ்து பெற்றுள்ளது. இத்தாலுகாவிற்கு உட்பட்டு 30 ஊராட்சிகளை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு சிங்கம்புணரி வந்து செல்கின்றனர். மேலும் வங்கி பரிவர்த்தனைகளுக்கான சிங்கம்புணரி அவர்கள் வரவேண்டிய நிலை உள்ளது. இந்தநிலையில் தற்போது சிங்கம்புணரியில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்கள் செயல்படாமல் காட்சிப்பொருளாக உள்ளன. மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே இவை வேலை செய்வதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

ஏ.டி.எம். எந்திரங்கள் செயல்படாததால் கூலி தொழிலாளிகள் முதல் தொழில் அதிபர்கள் வரை அனைவரும் பண பரிவர்த்தனை செய்யமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தானியங்கி பணம் செலுத்தும் ஏ.டி.எம். எந்திரங்கள் செயல்படாததால், அவசர தேவைகளுக்கு இரவு நேரங்களில் பணம் அனுப்ப முடியாமலும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சிங்கம்புணரி நகரில் செயல்படாமல் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்