குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு: கிராம மக்களுடன் மீண்டும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
விளாத்திகுளம் அருகே உள்ள சின்னவநாயக்கன்பட்டியில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் கிராம மக்களுடன் மீண்டும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் அருகே உள்ள சின்னவநாயக்கன்பட்டியில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் கிராம மக்களுடன் மீண்டும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பள்ளிக்கு அனுப்ப மறுப்பு
விளாத்திகுளம் அருகே சின்னவநாயக்கன்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 126 மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் உள்ள ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் தங்களது குழந்தைகளை அந்த பள்ளிக்கு கடந்த 9–ந்தேதி முதல் அனுப்பவில்லை. இதனால் கடந்த 23 நாட்களாக குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர்.
இதற்கிடையே, கடந்த 12–ந்தேதி விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் லெனின், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா ஆகியோர் தலைமையில் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது குழந்தைகளின் பெற்றோர்கள், எங்களுக்கு அரசு பள்ளி தான் வேண்டும் என்று கூறி அதில் உறுதியாக இருந்தனர். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும், தங்கள் குழந்தைகளுக்கு மாற்று சான்றிதழ் வேண்டும் என்று கேட்டு கலெக்டரிடம் மனு அளித்து உள்ளனர்.
மீண்டும் பேச்சுவார்த்தை
இந்த நிலையில் நேற்று சின்னவநாயக்கன்பட்டிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன், மாவட்ட கல்வி அலுவலர் சீனிவாசன், விளாத்திகுளம் தாசில்தார் லெனின் ஆகியோர் சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம், எங்கள் குழந்தைகளை நாங்கள் அரசு பள்ளியில் தான் படிக்க வைக்க விரும்புகிறோம். இதனால்தான் மாற்று சான்றிதழ் கேட்கிறோம் என்று தெரிவித்தனர்.
அரசு பள்ளிக்கூடங்கள் சின்னவநாயக்கன்பட்டியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சல்லிசெட்டிபட்டி மற்றும் சேதுபுரம் ஆகிய கிராமங்களில் உள்ளன. அதில் உங்களுக்கு சிரமம் ஏற்படும் என அதிகாரிகள் கூறினர். இருப்பினும், குழந்தைகளின் மாற்று சான்றிதழ் வேண்டும் என்பதில் பெற்றோர்கள் உறுதியாக இருந்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.