‘‘ஆராய்ச்சி படிப்பில் தமிழகம்தான் உயர்வான இடத்தில் இருக்கிறது’’ அமைச்சர் அன்பழகன் பெருமிதம்

‘‘ஆராய்ச்சி படிப்பில் தமிழகம்தான் உயர்வான இடத்தில் இருக்கிறது‘‘ என்று அமைச்சர் அன்பழகன் பெருமிதத்துடன் கூறினார்.

Update: 2018-07-31 21:30 GMT

நெல்லை,

‘‘ஆராய்ச்சி படிப்பில் தமிழகம்தான் உயர்வான இடத்தில் இருக்கிறது‘‘ என்று அமைச்சர் அன்பழகன் பெருமிதத்துடன் கூறினார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:–

65 புதிய கல்லூரிகள்

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கைப்படி இந்திய அளவில் தற்போது 903 பல்கலைக்கழகங்களும், 39 ஆயிரத்து 50 கல்லூரிகளும், 10 ஆயிரத்து 11 தனியார் கல்வி நிறுவனங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் 58 பல்கலைக்கழகங்களும், 2 ஆயிரத்து 472 கல்லூரிகளும் உள்ளன.

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 16 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள், 4 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை தொடங்கினார். அவர் மொத்தம் 65 புதிய கல்லூரிகளை தொடங்கினார். ஜெயலலிதா வழியில் வந்த இந்த அரசு 2017–2018–ம் கல்வி ஆண்டில் 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 3 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளையும் தொடங்கி உள்ளது.

உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை

தொடர்ந்து புதிய கல்லூரிகள், புதிய பாடப்பிரிவுகள் தொடங்கியதன் காரணமாக உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தற்போது மத்திய அரசில் உயர் கல்வியின் மாணவர் சேர்க்கை 25.8 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் 36 சதவீதமாக உள்ளது. உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தை வகிக்கிறது.

ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்தியாவில் 20 பல்கலைக்கழகங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த பல்கலைக்கழகங்கள் தலா ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு பெறும் நிலையை பெற்றுள்ளது. இதில் தமிழக உயர்கல்வி துறையின்கீழ் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகிய 5 பல்கலைக்கழகங்கள் இந்த சிறப்பு நிலை நிதிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

ஆராய்ச்சி படிப்பு

இந்த ஆண்டும் ஆராய்ச்சி படிப்பில் தமிழகம்தான் உயர்வான இடத்தில் இருக்கிறது. மாற்றங்களை ஏற்று பல புதிய மாறுதல்களை உருவாக்கும் பொறுப்பு மாணவர்களுக்கு உண்டு. அதற்கான ஊக்க சக்தியாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். பட்டம் பெறும் மாணவர்கள் உங்கள் அறிவாற்றலால் உன்னதங்களை பிடித்து சாதனை புரிய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்