மோட்டார் சைக்கிள் மீது காரை மோதவிட்டு தொழிலாளி வெட்டிக்கொலை
திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது காரை மோதவிட்டு, தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு சென்றபோது பழிக்குப்பழியாக மர்மநபர்கள் இந்த வெறிச்செய லில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல்,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர், மதுரை அருகே உள்ள கறிக்குளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கும், சித்தையன்கோட்டையை சேர்ந்த ஜமால்முகமது என்பவருக்கும் குளத்தில் மீன் வளர்க்க குத்தகை எடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு செம்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுபாரில் ஜமால்முகமது இருந்தார். அப்போது அங்கு வந்த செல்வக்குமார் தரப்பினருக்கும், ஜமால்முகமதுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஜமால்முகமது கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமார், அவருடைய கூட்டாளிகள் முத்துப்பாண்டி, மருதுபாண்டி உள்பட சிலரை கைது செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் கோர்ட்டில் செல்வக்குமார், முத்துப்பாண்டி, மருதுபாண்டி ஆகியோர் ஆஜராகினர். பின்னர் அவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில், திண்டுக்கல்லில் இருந்து சொக்கலிங்கபுரத்துக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை முத்துப்பாண்டி ஓட்டினார்.
திண்டுக்கல்லை அடுத்த குட்டியப்பட்டி பிரிவு நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் சென்றுகொண்டு இருந்தது. அப்போது, பின்னால் வந்த ஒரு கார், திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து காரில் இருந்து ஒரு கும்பல் திபு, திபுவென அரிவாள்களுடன் வேகமாக இறங்கி வந்தது. பின்னர் அவர்கள் செல்வக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்த முத்துப்பாண்டியும், மருதுபாண்டியும் உயிரை காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்பியோடினர்.
அந்த கும்பல் வெட்டியதில் செல்வக்குமாரின் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே முத்துப்பாண்டி மற்றும் மருதுபாண்டி ஆகியோரையும் அந்த கும்பல் விரட்டி சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் தப்பியோடிவிட்டனர். செல்வக்குமார் இறந்ததை உறுதி செய்த அந்த கும்பல், தாங்கள் வந்த காரிலேயே தப்பி சென்று விட்டனர்.
இகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். செல்வக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, கார் மோதியதில் படுகாயம் அடைந்த முத்துப்பாண்டியும், மருதுபாண்டியும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வக்குமாரை கொலை செய்துவிட்டு காரில் தப்பி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
கோர்ட்டில் ஆஜராகிவிட்டு சென்ற தொழிலாளியை, மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவத்தால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது. கொலை செய்யப்பட்ட செல்வக்குமாருக்கு தனம் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.