மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 48,836 மாணவ–மாணவிகளுக்கு பட்டம் கவர்னர் வழங்கினார்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 48 ஆயிரத்து 836 மாணவ– மாணவிகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டம் வழங்கினார்.;

Update:2018-08-01 04:00 IST

நெல்லை,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 48 ஆயிரத்து 836 மாணவ– மாணவிகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டம் வழங்கினார்.

பட்டமளிப்பு விழா

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 26–வது பட்டமளிப்பு விழா அப்பல்கலைக்கழகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வாழ்த்தி பேசினார்.

மொத்தம் 48 ஆயிரத்து 836 மாணவ–மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தர வரிசை பட்டியலில் இடம் பிடித்த 86 மாணவ–மாணவிகளுக்கும், 423 பி.எச்டி. முடித்த மாணவர்களுக்கும் பட்டம் வழங்கப்பட்டது.

2 பதக்கங்கள்

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி மாணவி ஹைருன் ரைசா பானு, நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் ராமலட்சுமி, சாந்தி, நெல்லை சாரதா மகளிர் கல்லூரி மாணவி அர்ச்சனா, தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவி அபியா மச்சோடா ஆகியோர் தலா 2 பதக்கங்களை பெற்றனர். மொத்தம் 509 பேருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரடியாக பட்டங்களை வழங்கினார்.

இதையடுத்து கவர்னர் உறுதிமொழி படிவத்தை வாசிக்க மாணவ–மாணவிகள் திரும்ப வாசித்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.2 கோடியே 80 லட்சம் செலவில் மாணவிகள் விடுதி புதிதாக கட்டப்பட்டு உள்ளது. முன்னதாக அந்த புதிய கட்டிடத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார்.

திட்டமிட வேண்டும்

சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், போரூர் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன ஆய்வுப்புல முதன்மையாளருமான எஸ்.பி.தியாகராஜன் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்துகிறேன். இந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்த உங்கள் பெற்றோரை மறந்து விடக்கூடாது. நீங்கள் உயர்கல்வி பெற வேண்டும். இந்தியாவில்தான் மனித ஆற்றல் அதிகமாக இருக்கிறது. மாணவர்கள் தகவல் பரிமாற்றம், மொழி திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். உங்களிடம் திறமை இருந்தால் பெரிய நிறுவனங்கள் உங்களை தேடி வரும். அப்படியில்லையென்றால், அந்த நிறுவனங்களை நீங்கள் தேடி போக வேண்டியது இருக்கும். வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், எந்த படிப்பு எடுத்து படிக்க வேண்டும்? என்று திட்டமிட வேண்டும். அப்படி திட்டமிட்டு செயல்பட்டால் உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்“ என்றார்.

துணைவேந்தர் பேச்சு

முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் வரவேற்று பேசும்போது, “இந்த நாள் பல்கலைக்கழக வரவாற்றில் ஒரு பொன்னான நாள் ஆகும். இளநிலை, முதுகலை, பி.எச்டி. உள்ளிட்ட படிப்புகளில் 48 ஆயிரத்து 836 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த படிப்பு உங்கள் வாழ்க்கைக்கு உதவிகரமாக இருக்க வேண்டும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 27 துறைகள் உள்ளன. இந்த பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் 79 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

இந்த ஆண்டு மட்டும் 134 கருத்தரங்கம் நடத்தப்பட்டு உள்ளது. நமது பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, சுவிடன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்து இருக்கிறர்கள். சர்வதேச தரத்தில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேவையான நிதிகளை தமிழக அரசு தந்துள்ளது. இதன்மூலம் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. பட்டம் பெற்ற நீங்கள், உங்கள் பல்கலைக்கழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் சமுதாயத்தில் நீங்கள் பணியாற்ற வேண்டும்“ என்றார்.

கலெக்டர்– எம்.எல்.ஏ.

விழாவில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால், நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ., பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு, நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்