மராத்தா போராட்டத்தில் பயங்கர வன்முறை 25 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு
மராட்டியத்தில் கல்வி, வேலைவாய்ப் பில் 16 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு மராத்தா சமுதாயத் தினர் போராடி வருகின்றனர்.
மும்பை,
கடந்த ஆண்டு பிரமாண்ட அமைதி பேரணிகளை நடத்தி நாட்டின் கவனத்தை ஈர்த்தனர். இதில் பலன் கிடைக்காததால் அவர்களது போராட்டம் வன்முறை களமாக மாறியது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
அவுரங்காபாத்தில் வாலிபர் ஒருவர் ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் மராத்தா சமுதாயத்தினர் போராட்டத்தை மிக தீவிரமாக்கியது. மற்றொருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து ெகாண்டார்.
நவிமும்பையில் நடந்த போராட்டத்தில் வன்முறை யாளர்கள் தாக்கியதில் ரோகன் தோட்கர்(வயது21) என்ற வாலிபர் பலியானார்.
மராத்தா சமுதாயத்தினரின் இடஒதுக்கீடு போராட்டத் துக்கு ஆதரவாக 5 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர்.
இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமுதாயத்தினர் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டு வருவது மராட்டியத் தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், மராத்தா சமுதாயத்தினரின் இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படாததை கண்டித்து, நேற்றுமுன்தினம் இரவு அவுரங்காபாத்தை சேர்ந்த பிரமோத் ஜெய்சிங் ஹோரே(35) என்ற மேலும் ஒரு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக நான் எனது உயிரை மாய்த்து கொள்கிறேன் என ‘பேஸ்புக்’ மற்றும் ‘வாட்ஸ்-அப்’ சமூக வலைதளங்களில் பதிவிட்டு விட்டு அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
தண்டவாளத்தில் கிடந்த அவரது உடலை நேற்று காலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இடஒதுக்கீடு பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று ஜெய்சிங் ஹோரேயின் குடும்பத்தினர்தெரிவித்தனர்.
இடஒதுக்கீடு போராட்டத் தின் ஒரு பகுதியாக நேற்று புனே அருகே உள்ள சாக்கன், சோலாப்பூர் ஆகிய பகுதிகளில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அங்குள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.
முன்எச்சரிக்கை நடவடிக் கையாக அரசு போக்குவரத்து கழகம் பஸ் சேவைகளை ரத்துசெய்தது. இதன் காரணமாக அரசு பஸ்கள் அங்குள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
சாக்கனில் மாநில அரசை கண்டித்து மராத்தா சமுதாயத்தினர் பேரணி நடத்தினார்கள்.
அப்போது, பயங்கர வன்முறை வெடித்தது. சாலைகளின் குறுக்கே டயர்களை போட்டு எரித்தனர். அரசு பஸ்கள் மீது போராட்டக் காரர்கள் சரமாரியாக கற்களை வீசி தாக்கினார்கள். சாக்கன் பகுதியில் 6 பஸ்கள் உள்ளிட்ட 25 வாகனங்களுக்கு தீவைக் கப்பட்டன. அந்த பஸ்கள் தீயில் எரிந்து நாசமாகின. வன்முறையாளர்கள் 4 சிவசாகி பஸ்களை அடித்து நொறுக் கினார்கள். வன்முறையில் மொத்தம் 80 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
வன்முறையில் ஈடுபட்டிருந்தவர்கள் சாக்கன் போலீஸ் நிலையத்தையும் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். அவர்களை தடுக்க முயன்ற போலீசாரையும் கண்மூடித்தனமாக தாக்கினார்கள்.
இதில் 4 போலீசார் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
வன்முறையாளர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டி அடித்தனர். இதன் காரணமாக சாக்கன் பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.
இதையடுத்து, அதிரடியாக புனே மாவட்ட நிர்வாகம் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியது.
இதேபோல நந்துர்பர் பகுதியிலும் மராத்தா சமுதாயத்தினர் நடத்திய போராட்டத்தில் பயங்கர வன்முறை உண்டானது.