‘ரசாயன தாக்குதல் நடத்துவேன்’ பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
பிரதமர் நரேந்திர மோடி மீது ரசாயன தாக்குதல் நடத்துவேன் என மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை அழைப்பு ஒன்று வந்தது. அதில், எதிர்முனையில் பேசிய நபர், ‘பிரதமர் நரேந்திர மோடி மீது ரசாயன தாக்குதல் நடத்துவேன்’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதைக்கேட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில், மிரட்டல் விடுத்த ஆசாமி மும்பையில் இருந்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியது கண்டறியப்பட்டது.
இதுபற்றி தேசிய பாதுகாப்பு படையினர் மும்பை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் செல்போன் எண் அலைவரிசை மூலம் மர்மஆசாமி இருக்கும் இடத்தை ஆராய்ந்தனர். இதில், அவர் மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று குறிப்பிட்ட அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், அவரது பெயர் காசிநாத் மண்டல்(வயது22) என்பதும், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அவர், மும்பை வால்கேஸ்வர் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.
அவர் மீது டி.பி. மார்க் போலீஸ் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.