ஹெலிகேமரா மூலம் எடுக்கப்பட்ட பழனி மலைக்கோவில் படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மர்ம நபர்கள்
ஹெலிகேமரா மூலம் பழனி மலைக்கோவிலை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் மர்ம நபர்கள் வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
பழனி,
முருகப்பெருமானின் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்தரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மேலும் ஆண்டு முழுவதும் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை இருக்கும். தைப்பூசம், பங்குனி உத்தர திருவிழாவின் போது பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
அப்போது பழனி நகர் போலீசார் தனியாருக்கு சொந்தமான ஹெலிகேமரா மூலம் முறையான அனுமதியுடன் கண்காணிப்பு பணி மேற்கொள்வார்கள். ஆனால் தற்போது மர்ம நபர்கள் சிலர் அனுமதியின்றி ஹெலிகேமரா மூலம் மலைக்கோவில், இடும்பன் மலை மற்றும் பழனி நகரை புகைப்படம் எடுத்து அதனை முகநூல் மற்றும் ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் ஹெலிகேமரா மூலம் எடுத்து பழனி மலைக்கோவில், இடும்பன் மலை ஆகியவற்றின் படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது யார் என்பது குறித்து பழனி நகர் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக பழனி பகுதியில் திருமண நிகழ்ச்சிகளில் புகைப்படம், வீடியோ எடுப்பவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பழனி பகுதியில் உள்ள திருமண மண்டப உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அந்த கூட்டத்தில் திருமண மண்டபத்துக்குள் மட்டுமே ஹெலிகேமரா மூலம் படம் பிடிக்க புகைப்பட கலைஞர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். வெளியிடங்களில் என்றால் முறையான அனுமதி பெற்றபிறகே படம் பிடிக்க வேண்டும் என புகைப்படம், வீடியோ எடுப்பவர்களிடம் அறிவுறுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பழனி கோவில் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு இருப்பது பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.