விவசாயி வீட்டில் ரூ.2½ லட்சம் நகை-பணம் திருட்டு
கள்ளக்குறிச்சியில் பட்டப்பகலில் விவசாயி வீட்டில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 67), விவசாயி. இவரது மனைவி ராதா(60). கண்ணன் நேற்று மதியம் 2 மணி அளவில் தனது வீட்டை பூட்டி விட்டு ராதாவுடன் அதே பகுதியில் உள்ள குள்ளகருப்பன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
பின்னர் மாலை 6 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாயை காணவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கண்ணன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் மேற்கூரை ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை திருடிக் கொண்டு தப்பி சென்றது தெரியவந்தது. திருடுபோன நகை-பணத்தின் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.