வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகைகள் திருட்டு

கடையம் அருகே வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். மற்றொரு வீட்டில் கொள்ளைமுயற்சி நடந்தது.

Update: 2018-07-30 22:00 GMT

கடையம், 

கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது மைதீன் மகன் முகம்மது அப்துல் ரசாக் (வயது 38). இவர் பெங்களூரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் வளாகத்தில் உள்ள மற்றொரு வீட்டில் மைதீன் பாத்து என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில் அப்பகுதியில் உள்ள தனது மற்றொரு வீட்டில் தூங்க சென்றார்.

முகம்மது அப்துல் ரசாக் மற்றும் மைதீன் பாத்து ஆகியோரது வீடுகளில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் அந்த 2 வீடுகளிலும் திருட திட்டமிட்டனர். அதன்படி முகம்மது அப்துல் ரசாக்கின் வீட்டின் முன்பக்க கதவை மர்மநபர்கள் உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து திறந்து, அதில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.

பின்னர் மைதீன் பாத்து வீட்டின் முன்பக்க கதவை மர்மநபர்கள் உடைத்து திறந்தனர். ஆனால் அவரது வீட்டில் எந்த பொருட்களும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நேற்று காலையில் மைதீன் பாத்து தனது வாடகை வீட்டுக்கு சென்றபோது, அங்கு தனது வீடு மற்றும் முகம்மது அப்துல் ரசாக்கின் வீடு ஆகியவற்றில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர், முகம்மது அப்துல் ரசாக் மற்றும் ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முகம்மது அப்துல்ரசாக் தனது வீட்டில் உள்ள பீரோவில் 8 பவுன் நகைகளை வைத்து இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடுபுகுந்து நகைகளை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்