தலை துண்டித்து கொலையான ஆட்டோ டிரைவர் உடல் கண்டெடுப்பு

தலை துண்டித்து கொலையான ஆட்டோ டிரைவர் உடல், அய்யஞ்சேரி மீனாட்சிபுரம் அருகே காலி மைதானத்தில் கண்டெடுக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2018-07-30 22:30 GMT
வண்டலூர்,

சென்னையை அடுத்த தாம்பரம் கடப்பேரி தெற்கு குளக்கரை, முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன்(வயது 30). ஆட்டோ டிரைவரான இவர், மர்ம நபர்களால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.

துண்டிக்கப்பட்ட இவரது தலை மட்டும் நேற்று முன்தினம் அதிகாலை ஊரப்பாக்கம் ராஜீவ்காந்தி நகர் 1-வது தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டு முன்பு வீசப்பட்டு இருந்தது. கூடுவாஞ்சேரி போலீசார் அந்த தலையை கைப்பற்றினர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கமலக்கண்ணனின் உடலை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அய்யஞ்சேரி மீனாட்சிபுரம் அருகே உள்ள காலி மைதானத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் உடல் மட்டும் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள், கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் மற்றும் கூடுவாஞ்சேரி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தலை இல்லாத அந்த உடலை கைப்பற்றினர். அந்த ஆணின் உடலில் கை மற்றும் கால் விரல்கள் சிதைக்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து அந்த உடலுடன், ஏற்கனவே கைப்பற்றப்பட்ட கமலக்கண்ணனின் துண்டிக்கப்பட்ட தலையை பொருத்தி பார்த்தனர். அதில் அந்த உடல், ஆட்டோ டிரைவர் கமலக்கண்ணன் உடையதுதான் என்பது தெரிந்தது. இதை அவரது உறவினர்களும் உறுதி செய்தனர். பின்னர் உடல் மற்றும் தலையை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கடந்த சனிக்கிழமை இரவு கமலக்கண்ணனுக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது. பின்னர் அவர் தனது மனைவியிடம் சவாரி செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்று உள்ளார். மறுநாள் காலையில் துண்டிக்கப்பட்ட அவரது தலை ஊரப்பாக்கத்திலும், நேற்று அவரது உடல் அய்யஞ்சேரி மீனாட்சிபுரம் பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

கமலக்கண்ணனின் ஆட்டோ, குரோம்பேட்டை மேம்பாலம் கீழே நிறுத்தப்பட்டு இருந்தது. ஆட்டோ முழுவதும் ரத்தக்கறை படிந்து உள்ளது. எனவே கொலையாளிகள், சவாரி செல்வதற்காக அழைப்பதுபோல் கமலக்கண்ணனை அழைத்து ஆட்டோவில் வைத்து அவரை கொலை செய்து விட்டு, பின்னர் தலையை துண்டித்து, உடலையும், தலையையும் வெவ்வேறு இடங்களில் வீசி விட்டு, ரத்தக்கறை படிந்த ஆட்டோவை குரோம்பேட்டையில் நிறுத்தி விட்டு தப்பிச்சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

தற்போது அந்த ஆட்டோவை போலீசார், கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

கொலையாளிகள் யார்?, எதற்காக ஆட்டோ டிரைவர் கமலக்கண்ணனை கொலை செய்தனர்? என்பது தெரியவில்லை. கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் இந்த சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மிக விரைவில் கொலையாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்