ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் கர்நாடகத்தை பிளவுபடுத்த பா.ஜனதா அனுமதிக்காது; எடியூரப்பா அறிக்கை

கர்நாடகத்தை பிளவுபடுத்த பா.ஜனதா அனுமதிக்காது என்றும், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் எடியூரப்பா கூறினார்.

Update: 2018-07-30 21:45 GMT
பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:–

அகண்ட கர்நாடகத்திற்காக நடந்த போராட்டத்தில் நமது முன்னோர் ஆயிரக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். ஆனால் சமீபகாலமாக முதல்–மந்திரி குமாரசாமி பேசி வரும் கருத்துகள், அகண்ட கர்நாடகத்தை பிளவுபடுத்தும் வகையில் இருக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் மாநில மக்கள் பா.ஜனதாவுக்கு 104 இடங்களை வழங்கினர். காங்கிரசுக்கு 79 இடங்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 38 இடங்களையும் வழங்கினர்.

ஆனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் புனிதமற்ற கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன. இதன் மூலம் அந்த கட்சிகள் மாநில மக்களை ஏமாற்றிவிட்டன. வடகர்நாடகத்தை குமாரசாமி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறார். விவசாய கடன் தள்ளுபடி செய்ய வடகர்நாடக மக்கள் எனக்கு வாக்களித்தார்களா? என்று குமாரசாமி கேட்கிறார்.

குமாரசாமி ஆணவப்போக்கை மட்டும் வெளிப்படுத்தவில்லை. அரசியல் சாசனத்தையும் அவமதித்துவிட்டார். கர்நாடக அரசியல் வரலாற்றில் குமாரசாமியை போல் எந்த முதல்–மந்திரியும் இதுபோல் மாநிலத்தை பிளவுபடுத்தும் வகையிலும், ஆணவத்துடனும் பேசியது இல்லை. வடகர்நாடகத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பெங்களூருவின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதாக குமாரசாமி சொல்கிறார்.

குமாரசாமி கருத்து தெரிவித்த வி‌ஷயத்தில் காங்கிரஸ் கட்சி அமைதி காக்கிறது. அந்த கட்சி தான் குமாரசாமிக்கு ஆதரவு வழங்கியுள்ளது. தனது கட்சியை பலப்படுத்த தேவேகவுடா சதி செய்கிறார். இந்த சதியை மாநில மக்கள் ஏற்கமாட்டார்கள். பொறுத்துக்கொள்ளவும் மாட்டார்கள். லிங்காயத் சமூகத்தை உடைக்க முந்தைய காங்கிரஸ் அரசு முயற்சி செய்தது. அதே போல் இப்போது குமாரசாமியும் திட்டமிடுகிறார். ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள்.

தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள மடாதிபதிகள் மற்றும் பல்வேறு தலைவர்களுடன் கலந்து பேசுவதற்காக நான் நாளை (அதாவது இன்று) பெலகாவிக்கு செல்கிறேன். அகண்ட கர்நாடகத்திற்கு எதிராக செயல்பட வேண்டாம் என்று அவர்களிடம் நான் எடுத்துக்கூறுவேன். வடகர்நாடகம் பற்றி குமாரசாமியின் பொறுப்பற்ற கருத்தால், அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். எக்காரணம் கொண்டும், கர்நாடகத்தை பிளவுபடுத்த பா.ஜனதா அனுமதிக்காது.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்