உயர்த்தப்பட்ட சாலை அமைக்கும் திட்டம்: மக்களிடம் கருத்து கேட்க அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவு

பெங்களூருவில் உயர்த்தப்பட்ட சாலை அமைக்கும் திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்க அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவிட்டார்.

Update: 2018-07-30 22:15 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் முக்கிய பகுதிகளில் 102 கிலோ மீட்டர் நீளத்திற்கு உயர்த்தப்பட்ட சாலை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஹெப்பால்–சில்க்போர்டு, கே.ஆர்.புரம்–கொரகுண்டேபாளையா, வர்த்தூர் கோடி–ஞானபாரதி இடையே இந்த உயர்த்தப்பட்ட சாலைகள் அமைக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக முதல்–மந்திரி குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்–மந்திரி பரமேஸ்வர், பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா, கூட்டுறவு துறை மந்திரி பண்டப்பா காசம்பூர், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் அந்த உயர்த்தப்பட்ட சாலைக்கான திட்ட அறிக்கையை அதிகாரிகள் தாக்கல் செய்து, குமாரசாமியிடம் விளக்கி கூறினர். இதில் குமாரசாமி பேசியதாவது:–

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பொது போக்குவரத்து சேவையை பலப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆயினும் மெட்ரோ ரெயில் சேவை ஒன்று மட்மே போக்குவரத்து நெரிசலை தீர்த்துவிடாது. இந்த திட்ட அறிக்கை குறித்தும், இதை அமல்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.  இவ்வாறு குமாரசாமி பேசினார்.

அதே போல் நகரின் முக்கிய சந்திப்புகளில் சுரங்க பாதை அமைப்பது குறித்தும் அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.

மேலும் செய்திகள்