திருப்புவனம் அருகே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 2 பேர் கைது

திருப்புவனம் அருகே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் நாடகமாடியது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து 2 பேரை கைது செய்தனர்.

Update: 2018-07-30 22:00 GMT

திருப்புவனம்,

திருப்புவனம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது புலியூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் மகன்கள் பாலமுருகன், ஆனந்தவேல். இதில் பாலமுருகன் இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவராக இருந்து வருகிறார். இவருடைய தம்பி ஆனந்தவேல் இந்து மக்கள் கட்சியின் சிவகங்கை மாவட்ட தலைவராக உள்ளார்.

இந்நிலையில் கடந்த 2017–ம் ஆண்டு ஜூலை மாதம் மர்ம நபர்கள் நள்ளிரவில் ஒரு மோட்டார் சைக்கிளில் பாலமுருகன் வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். அப்போது பாலமுருகன் வெளியில் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு மர்ம நபர்கள் விட்டு சென்ற நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் ஒரு பட்டா கத்தி, 3 பெட்ரோல் குண்டுகள் இருந்தன.

இதையடுத்து பாலமுருகன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 11–ந்தேதி நள்ளிரவில் ஹெல்மெட் அணிந்து நடந்து வந்த 3 பேர் பாலமுருகன் வீட்டின் மீது 2 குண்டுகளை வீசினர். இதில் ஒரு குண்டு வெடித்து வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமாயின.

இந்த சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமலைக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது ஆகியோர் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர், போலீசார் தீவிர விசாணை நடத்தி வந்தனர். விசாரணையில் பாலமுருகன் மற்றும் அவருடைய தம்பி ஆனந்தவேல் ஆகியோர் தங்களது வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீச வைத்து நாடகமாடியது தெரிய வந்தது.

இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக பாலமுருகன், அவரது மனைவி அழகுசாரதி, பாலமுருகன் தம்பி ஆனந்தவேல் மற்றும் புளியூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன், மதுரை ரிங் ரோடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், பனையூரைச் சேர்ந்த தினேஷ், மதுரை ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்த விஜய் உள்பட மொத்தம் 7பேர் மீது திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகன் மற்றும் கார்த்திக் ஆகிய 2 பேரை கைது செய்து மற்ற 5 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்