போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலை நீண்டகாலமாக கண்டுகொள்ளப்படாத கிராம சாலைகள், பொதுமக்கள் குற்றச்சாட்டு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டிஉள்ளனர்.

Update: 2018-07-30 22:15 GMT

பனைக்குளம்,

திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பகுதி தேவிபட்டினம். அதிக மக்கள் வசிக்கும் இப்பகுதியில் முக்கிய சாலையாக விளங்கி வருவது தேவிபட்டினம் பஸ் நிலைய சாலை. இந்த சாலை இருபுறமும் கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் கருணாசிடம் நேரில் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதேபோல சித்தார்கோட்டை பகுதியில் பஸ் நிறுத்தம் முதல் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் முக்கிய சாலையும் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றன. இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். மேலும் குடிநீர், மின்சாரம் போன்ற குறைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், மக்கள் குறைகளை கேட்க அரசியல் கட்சியினர் யாரும் இங்கு வரவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

புதுவலசை பள்ளிவாசல் வழியாக மீனவர்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையான கடற்கரை சாலை நீண்டகாலமாக அமைக்கப்படாமல் உள்ளது. புதுவலசை ஊருணி முதல் பனைக்குளம் தர்கா வழியாக செல்லக்கூடிய சாலைகளும் மற்றும் நாடார் குடியிருப்பு சாலை போன்றவை வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் அவசர தேவைக்கு ஆட்டோக்கள் கூட வரமறுக்கின்றனவாம்.

மேலும் பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முக்கிய சாலைகள் அனைத்தும் கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சோகையன்தோப்பு நான்கு முனை சாலையில் இருந்து புதுக்குடியிருப்பு மற்றும் கடற்கரை சாலை நீண்டகாலமாக புதிதாக அமைக்கப்படாமல் பள்ளி செல்லும் மாணவ–மாணவிகள் அரசு வழங்கிய சைக்கிளில் கூட செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் உள்ளாட்சி அமைப்புகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற அரசியல் கட்சியினர் கூட தங்களது கட்சி மேலிடத்தில் கூறி நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்களும், இளைஞர்களும் தெரிவிக்கின்றனர்.

இதேபோல அழகன்குளம் பஸ் நிலையம் முதல் கடற்கரை பகுதிக்கு செல்லக்கூடிய முக்கிய சாலைகள் மற்றும் ஊராட்சி மன்றம், மார்க்கெட் போன்றவற்றுக்கு செல்லும் சாலைகள் பல கரடு முரடாக கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆற்றங்கரை–அழகன்குளம் மெயின்ரோடு, ஆற்றங்கரை கடற்கரை சாலை போன்றவையும் நீண்டகாலமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனை சீரமைக்கக்கோரி யூனியன் அலுவலகத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என மீனவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

மண்டபம் யூனியனில் முக்கிய பகுதியாக விளங்கும் உச்சிப்புளிக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் தினமும் தங்களது அன்றாட தேவைக்காக வந்து செல்கின்றனர். இதேபோல இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவ–மாணவிகள் வந்து படிக்கின்றனர். இந்த பள்ளி உச்சிப்புளி பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவில் அமைந்துள்ளது. இந்த சாலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் சைக்கிளில் செல்லும் மாணவ–மாணவிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இந்த சாலையை புதுப்பிக்க பொதுமக்களும், மாணவ–மாணவிகளின் பெற்றோர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

இதுதவிர உச்சிப்புளி பஸ் நிறுத்தத்தில் இருந்து என்மனங்கொண்டான் வழியாக கடற்கரை வலசை செல்லும் சாலையும், புதுநகரம் பள்ளிவாசல் சாலையும் நீண்டகாலமாக பழுதடைந்து காணப்படுகிறது. இதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுஉள்ளனர். எனவே அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்