விபத்தில் இறக்கும் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், கட்டிட தொழிலாளர் சங்கம் மனு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நடராஜன் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

Update: 2018-07-30 22:45 GMT

விருதுநகர்,

விபத்தில் இறக்கும் கட்டிட தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நடராஜன் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

 அவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்களது சங்கத்தின் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு கீழ் கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுகிறோம். நலத்திட்ட உதவிகள் கோரி நலவாரியத்தில் விண்ணப்பித்த 30 நாட்களில் உதவிகள் வழங்குவதுடன் இறுதி சடங்கு உதவித்தொகையை உடல் அடக்கம் செய்தவற்கு முன்பாக வழங்க வேண்டும். பதிவு செய்து பதிவு ஆவணப்படி 60 வயது நிறைவடைந்தால் வேறு எவ்வித நிபந்தனையும் இன்றி கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதுடன் ஆண்டு தோறும் 10 சதவீதம் உயர்வு வழங்குவதுடன் ஓய்வூதியர்மரணம் அடைந்தால் இயற்கை மரணம் இறுதி சடங்கு உதவிநதி வழங்க வேண்டும். விபத்து எங்கு நடந்தாலும் அப்போது மரணம் அடைந்தாலும் மரணம் அடைந்த கட்டிட தொழிலாளர் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். பிரசவ உதவி தொகை குறைந்தபட்ச சம்பள சட்டப்படி கணகிட்டு 6மாத கால சம்பளமாக பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.90 ஆயிரம் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி, சேமநல வைப்பு நிதி திட்டங்களை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். திருமணநிதி உதவியை ரூ.1 லட்சமாக வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி செலவு முழுவதையும் வாரியம் ஏற்று வழங்க வேண்டும். 3 சென்ட் வீட்டு மனை வழங்கி வீடு கட்டி கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்