ராஜபாளையத்தில் 4 வழிச்சாலை திட்ட பாதையை மாற்ற முயற்சியா? ப.ஜனதா குற்றச்சாட்டுக்கு எம்.எல்.ஏ. பதில்
ராஜபாளையத்தில் 4 வழிச்சாலை திட்டபாதையை மாற்ற முயற்சிப்பதாக பா.ஜனதா கரு.நாகராஜன் குற்றம்சாட்டியிருப்பதற்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பதில் அளித்துள்ளார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கை வருமாறு:–
ராஜபாளையம் தொகுதி மேம்பாட்டு பணிகளுக்கு நான் தொடர்ந்து குரல் கொடுத்ததன் பலனாக தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், ரெயில்வே மேம்பாலம் அமைத்தல், நீதி மன்ற கட்டிடம் மற்றும் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் வசதி ஆகிய நலத்திட்டங்கள் வரப்பெற்றுள்ளது.
அதன் தொடர்ச்சியாக ராஜபாளையம் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வந்த நிலையில் புறவழிச்சாலை வேண்டி மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது அவர்கள் ராஜபாளையம் நகருக்கு மட்டும் புறவழிச்சாலை கேட்பதைவிட திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை 4 வழிச்சாலை திட்டம் அமைக்க சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளுமாறு ஆலோசனை கூறினார்கள்.
அதன்படி தேசியநெடுஞ்சாலைத் துறை பொது மேலாளர் சின்னரெட்டியை 14.10.2016 அன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன். அதனை பரிசீலனை செய்து 4 வழிச்சாலை கொண்டுவர நடவடிக்கை எடுத்தார்கள் என்பது உண்மை தான். அதற்குண்டான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.
ஆனால் பா.ஜனதா நிர்வாகி கரு.நாகராஜன் 2 கி.மீ. தொலைவில் வரவிருந்த 4 வழிச்சாலையை 10 கி.மீ. தொலைவிற்கு மாற்றி அமைக்க கோரிக்கை வைத்ததாக கூறுவது முற்றிலும் தவறான செய்தியாகும். மேலும் 2 கி.மீ. தொலைவில் என்னுடைய தொகுதிக்கு சாலை அமைவதை முதலில் வரவேற்பது நானாகத்தான் இருக்க முடியும். அதைவிடுத்து 10 கி.மீ.தொலைவில் என்னுடைய தொகுதிக்கு வெளியில் சாலை அமைத்திட நான் எப்படி கோரிக்கை வைப்பேன்.
மேலும் பொதுமக்களுக்கு என்ன வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்து பெற்றுத் தருவதுதான் சட்டமன்ற உறுப்பினரின் பணியாகும், தொழில்நுட்ப ரீதியில் எந்த வழியாக சாலை அமைக்க வேண்டும் என்பது அதிகாரிகளின் அரசின் கொள்கை முடிவாகும். அதன்படி அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட சாலையை அவர்கள் முன்னிலையில் அவர்கள் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு அறிவிப்பு விடுத்தேனே தவிர 10 கி.மீ. தொலைவில் தள்ளி அமைக்க நான் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.
இவ்வாறு கூறியுள்ளார்.