மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனம் நாளை மறுநாள் முதல் செல்லவுள்ளது

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான நடமாடும் சிறப்பு சிகிச்சை பிரிவு வாகனம் அரியலூர் மாவட்டத்திலுள்ள 6 தாலுகாவிற்கும் வாரத்தில் 2 தினங்கள் (செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை) செல்லவுள்ளது.

Update: 2018-07-30 22:15 GMT
அரியலூர்,

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான நடமாடும் சிறப்பு சிகிச்சை பிரிவு வாகனம் அரியலூர் மாவட்டத்திலுள்ள 6 தாலுகாவிற்கும் வாரத்தில் 2 தினங்கள் (செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை) செல்லவுள்ளது. பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையிலான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இந்த நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தில் இயன்முறை சிகிச்சை, உதவி உபகரண கருவிகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நுண்ணறிவினை அதிகரிக்கும் வகையிலான பொருட்கள், காது கேளாத மற்றும் வாய்பேசாத குழந்தைகளுக்கு விளக்கப்படங்கள் மற்றும் பொருட்கள் மூலம் பேச்சு பயிற்சி அளிக்கும் சாதனங்கள் மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான முடநீக்கு சாதனங்கள் மதிப்பீடு செய்யும் வகையில் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கால பயிற்சி மையங்களுக்கு வர இயலாத மாற்றுத்திறனாளி குழந்தைகளின் இடங்களுக்கு சென்று அவர்களை மதிப்பீடு செய்வதற்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மற்றும் 23-ந்தேதி அரியலூர் தாலுகாவிற்கும், 21-ந்தேதி மற்றும் செப்டம்பர் 11-ந்தேதி திருமானூர் தாலுகாவிற்கும், 16-ந்தேதி மற்றும் செப்டம்பர் 6-ந்தேதி செந்துறை தாலுகாவிற்கும், வருகிற 9, 30-ந்தேதிகளில் ஜெயங்கொண்டம் தாலுகாவிற்கும், 7, 28-ந்தேதிகளில் ஆண்டிமடம் தாலுகாவிற்கும், 14-ந்தேதி மற்றும் செப்டம்பர் 4-ந்தேதி தா.பழூர் தாலுகாவிற்கும் செல்லவுள்ளது. குறிப்பிடப்பட்ட தேதிகளில் அந்தந்த தாலுகாவில் உள்ள வட்டார வளமையங்களில் நடமாடும் சிகிச்சை பிரிவு வருகை புரிய உள்ளதையொட்டி பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையிலான மனவளர்ச்சி குறையுடைய, தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட செவித்திறன் குறைவுடைய, பார்வை குறைவுடைய, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் நேரில் வந்து பயன்பெறலாம்.

இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்