புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவையில்லை என்பதா? கவர்னர் கிரண்பெடிக்கு இந்திய கம்யூனிஸ்டு கண்டனம்

மாநில அந்தஸ்து தேவையில்லை என்று கூறும் உரிமை கவர்னருக்கு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2018-07-30 22:30 GMT

புதுச்சேரி,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம் நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுச்சேரியில் நாளை (புதன்கிழமை) முதல் 9–ந்தேதி வரை வீடுவீடாக சென்று பிரதமர் நரேந்திரமோடியின் தவறான ஆட்சி குறித்து விளக்கும் பிரசுரங்களை வழங்க உள்ளோம். 140 கிளை அலுவலகங்களிலும் கட்சியின் கொடியேற்றி பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம்.

9–ந்தேதி வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தில் மோடியின் தவறான ஆட்சியை கண்டித்து புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். நாட்டை பாதுகாக்கவும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும் வாகன பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு 15–ந்தேதி திருப்பூரில் மாநாடு நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு சலீம் கூறினார்.

முன்னாள் மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விசுவநாதன் கூறியதாவது:–

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்பதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுதியாக உள்ளது. தற்போதைய முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆரம்பத்தில் இருந்தே சிறப்பு மாநில அந்தஸ்து என்று குறுக்கு சால் ஓட்டிவந்தார். தற்போது காலம் அவருக்கு பாடம் புகட்டி உள்ளது. மாநில அந்தஸ்து தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் தர காங்கிரஸ் தடுமாற்றத்துடன் உள்ளது.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளை ஒருங்கிணைக்க முதல்–அமைச்சர் தவறிவிட்டார். எம்.எல்.ஏ.க்களை மட்டும் அழைத்து சென்றது மோசமான முன்னுதாரணம் ஆகும்.

மாநில அந்தஸ்து குறித்து கவர்னர் கிரண்பெடியின் பேச்சு கண்டிக்கத்தக்கதாகும். மாநில அந்தஸ்து தேவையில்லை என்று கூறும் உரிமை கவர்னருக்கு கிடையாது. அதை மாநில மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். கவர்னர் மாநிலா அந்தஸ்து பற்றி பேசியது ஒரு கட்சி சார்பாக பேசியதாக உள்ளது. இதை அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். மாநில அந்தஸ்துக்காக அனைத்து அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும் இணைந்து போராட்டங்கள் நடத்த வேண்டும்.

அப்போது கவர்னர் புதுச்சேரியை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படும். கவர்னர் சட்டப்படி நடந்துகொள்ளாததுடன் பொய்யாகவே நடந்து கொண்டு வருகிறார். சட்டசபையை நடத்த கவர்னர் உத்தரவு போடக்கூடாது. 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் சட்டசபைக்குள் அனுமதிக்கவேண்டும் என்பது தவறானது. அதுகுறித்து சபாநாயகர்தான் முடிவு எடுப்பார். நியமன எம்.எல்.ஏ.க்களுக்கான வக்கீல் போன்று கவர்னர் செயல்படுவது தவறு.

இவ்வாறு விசுவநாதன் கூறினார்.

தேசியக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான அஜீஸ் பாஷா கூறியதாவது:–

பிரதமரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் நாடு முழுவதும் 2.54 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசலை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டு வந்தால் லிட்டர் ரூ.40–க்கு கிடைக்கும். பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தபின்னர் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து உள்ளன.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 30 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது. பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே அழித்துவிடும். கோவா போன்று புதுச்சேரிக்கும் மாநில அந்தஸ்து வழங்கவேண்டும்.

இவ்வாறு அஜீஸ் பாஷா கூறினார்.

மேலும் செய்திகள்