கட்டிட தொழிலாளர் நலவாரியத்தில் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்

கட்டிட தொழிலாளர் நலவாரியத்தில் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2018-07-30 22:30 GMT
கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, நடைபாதை வசதி, புதிய ரேஷன்கார்டு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. கட்டிடத்தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வராஜ், பொதுச்செயலாளர் பாலாஜி ரங்கசாமி, பாலகிருஷ்ணன், தியாகராஜன், நந்தினி, சோமசுந்தரம், செல்வம், கலா உள்பட ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கட்டிட தொழிலாளர் நல வாரியத்தில் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈமச்சடங்கு உதவித்தொகையை உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாக வழங்க வேண்டும். விபத்து எங்கு நடந்தாலும், அதில் உயிரிழப்பு ஏற்பட்டால் இழப்பீடு தொகை ரூ.5 லட்சம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

ஆவணத்தின் படி 60 வயது பூர்த்தி அடைந்த கட்டிட தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். மேலும் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். திருமண உதவித்தொகையாக ரூ.1 லட்சம் வழங்குவதோடு, இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவற்றை அமல்படுத்த வேண்டும்.

கட்டிட தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை வாரியம் ஏற்றுக்கொள்வதோடு, இலவச வீட்டுமனை வழங்கி வீடுகள் கட்டி தர வேண்டும். வாரியத்தில் உறுப்பினர் பதிவை புதுப்பிக்க தவறிய தொழிலாளர்கள், இதுவரை பதிவு செய்ய தவறிய தொழிலாளர்களையும் சேர்த்து அவர்களுக்கு நலவாரியத்தின் பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அளித்த மனுவில், கோவை மாநகரில் உரிய அனுமதியின்றி பெண்கள் தங்கும் விடுதிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று இருந்தது.

கோவை அருகே மோப்பிரிபாளையம் பேரூராட்சி வாகராயம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், இந்த பகுதியில் உள்ள பொதுமக்களை ஒருவர் மிரட்டி பணம் பறித்து வருகிறார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வழக்கத்தை விட நேற்று கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மனு கொடுக்க வந்த பொதுமக்களும் தீவிர சோதனைக்கு பின்னரே கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். இதுதவிர கூட்டமாக மனு கொடுக்க வந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர். அதில் முக்கியமானவர்கள் 5 பேர் மட்டும் கலெக்டரை சந்தித்து மனு அளிக்க அனுமதித்தனர்.

மேலும் செய்திகள்