மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விடுதி பெண் வார்டன் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு

விடுதியில் தங்கி இருந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பெண் வார்டன் தலைமறைவான உள்ளார். இந்த நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2018-07-30 22:45 GMT

கோவை,

கோவை பீளமேட்டில் இயங்கி வரும் தனியார் பெண்கள் விடுதியில் தங்கி இருந்த மாணவிகளை, ஓட்டலுக்கு அழைத்துச்சென்று, விடுதி உரிமையாளருடன் நெருக்கமாக இருக்குமாறு வற்புறுத்திய பெண் வார்டன் புனிதாவை (வயது32) போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் ஆலங்குளம் பகுதியில் உள்ள கிணற்றில் சில நாட்களுக்கு முன்பு பிணமாக மிதந்தார். தலைமறைவான இவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் எழுதி இருந்த கடிதத்தையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலைமறைவாக உள்ள பெண் வார்டன் புனிதாவுக்கு காதலன் இருப்பதாக கூறப்படுகிறது. செல்போனை அணைத்து விட்டு காதலனுடன் தப்பிச் சென்ற புனிதா எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை தனிப்படை போலீசார் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் புனிதாவிடம் இதற்கு முன்பு பெண்கள் யாரும் ஏமாந்தார்களா? புனிதாவின் பின்னணி என்ன? அவருடன் செல்போனில் தொடர்பில் இருந்தவர்கள் யார்– யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் தேடி வரும்நிலையில், பெண் வார்டன் புனிதா முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை இன்னும் ஒருசில நாட்களில் நடை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புனிதாவுக்கு ஜாமீன் கொடுக்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு உள்ளதால் அரசு வக்கீல்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்