குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் கலெக்டர் பேச்சுவார்த்தையில் சமரசம்

திருச்சி பெரியமிளகுபாறையில் குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசமடைந்தனர்.;

Update: 2018-07-30 23:00 GMT
திருச்சி,

திருச்சி பெரியமிளகுபாறையில் கலெக்டர் அலுவலக சாலை, புதுத்தெரு உள்ளிட்ட தெருக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் செசன்சு கோர்ட்டு போலீசார் விரைந்து வந்தனர். சாலை மறியல் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கலெக்டர் அலுவலக சாலை பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் குடிநீர் சரியாக வினியோகிக்கப்படுவதில்லை. கடந்த 4 வருடங்களாக இதே நிலை நீடித்து வருகிறது. எங்களது பகுதி மேடான பகுதி என்பதால் குடிநீர் குழாய்க்கு தண்ணீர் சீராக வருவதில்லை. மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும். அதிலும் அனைவரும் குடிநீர் பிடிக்க முடியாது. வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களுக்கும் சீரான குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெரிய லாரியில் தண்ணீர் கொண்டுவரப்படுவதில்லை. சிறிய லாரியில் தான் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பலருக்கு குடிநீர் கிடைப்பதில்லை.

எனவே எங்களது பகுதிக்கு குடிநீர் வசதி முழுமையாக ஏற்படுத்தி தர வேண்டும், சீராக குடிநீர் வினியோகிக்க வேண்டும். குடிநீர் தொட்டி அமைப்பது அல்லது கூடுதல் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்தனர். அந்த நேரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு கலெக்டர் ராஜாமணி காரில் வந்தார். கலெக்டர் கார் வருவதை கண்ட போலீசார் விரைந்து சென்று கலெக்டரிடம் பொதுமக்கள் மறியல் போராட்டம் குறித்து தெரிவித்தனர். இதையடுத்து அவர் தான் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி காரில் இருந்து இறங்கி நடந்து வந்தார்.

அப்போது பொதுமக்கள், கலெக்டரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக கூறினர். அவர் கூடுதல் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்பின் பொதுமக்கள் அனைவரும் கலைந்து செல்ல புறப்பட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் கலெக்டர் அலுவலக சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

மாநகராட்சி லாரி மூலம் கூடுதல் தண்ணீர் வினியோகிக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தனர். அங்கு ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சிறிய தண்ணீர் லாரியில் பொதுமக்கள் தண்ணீரை குடத்தில் பிடித்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்