தனி மாநில விவகாரத்திற்கு தீமூட்டுவதை நிறுத்துங்கள்; ஊடகங்கள் மீது குமாரசாமி பாய்ச்சல்

வட கர்நாடகத்திற்கு தனி மாநிலம் கோரும் விவகாரத்திற்கு தீமூட்டுவதை நிறுத்தங்கள் என்று ஊடகங்கள் மீது குமாரசாமி கடுமையாக குறை கூறினார்.

Update: 2018-07-31 00:15 GMT

பெங்களூரு,

மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்பு முதல்–மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

வட கர்நாடகத்தை தனி மாநிலமாக அறிவிக்க கோரும் விவகாரத்தை ஒரு அரசியல் குழு பணியாற்றி வருகிறது. இந்த விவகாரத்திற்கு தீமூட்டும் வேலையை ஊடகங்கள் தான் செய்கிறது. அரசியல்வாதிகள் இதை செய்யவில்லை. ஊடகங்கள் இதை உடனே நிறுத்த வேண்டும். அகண்ட கர்நாடகம் ஒன்றே என்று நான் 100 முறை கூறி இருக்கிறேன். ஊடகங்கள் மனசாட்சிப்படி பணியாற்ற வேண்டும்.

வட கர்நாடகம் பற்றி நான் தவறாக எதையும் குறிப்பிடவில்லை. சட்டசபை கூட்டத்தின்போது பா.ஜனதாவை சேர்ந்த ஸ்ரீராமுலு தான் வட கர்நாடகத்திற்கு தனி மாநிலம் கோரும் வி‌ஷயம் குறித்து பேசினார். சன்னபட்டணாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நான் பேசும்போது, வட கர்நாடகத்திற்கு தனி மாநிலம் வழங்கிவிட்டால், நிதி எங்கிருந்து கிடைக்கும்? என்று பேசினேன். இது என்ன மிகப்பெரிய தவறா?. இதை ஊடகங்கள் அழுத்தி அழுத்தி சொல்கின்றன.

கொப்பல் விவசாயிகள் முழு விவசாய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அதை குறிப்பிட்டு பேசினேன். அதில் விவசாயிகளை குறை சொல்லவில்லை. ஆனால் வட கர்நாடகத்திற்கு தனி மாநிலம் குறித்து நான் பேசியதாக ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டன. இது சரியா?. மக்கள் இந்த அரசுக்கு ஆதரவாக உள்ளனர். ஊடகங்கள் தங்களின் பணியை சரியாக செய்ய வேண்டும்.

ரூ.2.18 லட்சம் கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளேன். அதில் ரூ.516 கோடியை 4, 5 மாவட்டங்களுக்கு ஒதுக்கியுள்ளேன். இதில் என்ன தவறு உள்ளது?. மனசாட்சிக்கு எதிராக ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன. பெங்களூருவில் உயர்த்தப்பட்ட சாலை அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இந்த திட்டத்தை மாநில நெடுஞ்சாலைத்துறை செயல்படுத்துகிறது.

இதில் அந்த துறையை சேர்ந்த மந்திரி எச்.டி.ரேவண்ணா கலந்து கொண்டார். ஆனால் பெங்களூரு வளர்ச்சி வி‌ஷயத்தில் எச்.டி.ரேவண்ணா தலையிடுவதாக ஊடகங்கள் குறை சொல்கின்றன. இந்த மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டுமா? அல்லது பாழாக வேண்டுமா?. நீங்கள் என்னை பின்தொடர்ந்து வர வேண்டாம்.  இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்