சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி விபத்து; முதியவர் பலி, 9 பேர் படுகாயம்
கோவில்பட்டி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முதியவர் பலியானார். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.;
கோவில்பட்டி,
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்தவர் செய்யது சுலைமான் (வயது 70). இவருடைய மனைவி உசேன் பானு (65). இவர்களின் மகன் காதர் மைதீன் (40). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் தனது குடும்பத்துடன் சுற்றுலாவாக மூணாறுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் புறப்பட்டார். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் இரவு நெல்லைக்கு புறப்பட்டு வந்தனர். காரை காதர் பாட்ஷா ஓட்டினார்.
நேற்று அதிகாலை 3 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இடைசெவல் என்னும் இடத்தில் கார் வந்தது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டு இருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் செய்யது சுலைமான் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார்.
இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டு இருந்த உசேன் பானு, காதர் மைதீன், பாகதூர் ஷா (60), சித்திக் (13), சுல்தானா (8), ஆஷிபா (6), சப்ரின் (9), ஜெராசின் (11) மற்றும் கார் டிரைவர் காதர் பாட்ஷா (31) ஆகிய 9 பேரை போலீசார் மீட்டு, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் உயிர் இழந்த செய்யது சுலைமானின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.