திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-07-30 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்திற்குள்் கடந்த 20-ந் தேதி அதிகாலை திருவாரூர் தாலுகா இன்ஸ்பெக்டர்் ஜெகதீசன் நுழைந்து மாணவர் சங்க நிர்வாகியை தேடி சோதனை செய்வதாக கூறி அத்துமீறி நடந்து கொண்ட சம்பவத்தை கண்டித்தும், இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்தும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாலும், அவருடைய தொகுதி என்பதாலும் பொது நலன் கருதி முற்றுகை போராட்டத்தை ஆர்ப்பாட்டமாக நடத்திட முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழனிவேல், பாலசுப்பிரமணியன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கோமதி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகையன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்