குடிநீர்கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

வத்தலக்குண்டு அருகே குடிநீர்கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

Update: 2018-07-30 21:45 GMT

வத்தலக்குண்டு, 

வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு கோட்டைப்பட்டி இந்திராநகர் உள்ளது. இங்கு சுமார் 150–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடும் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் குறைந்தது.

இதனால் அப்பகுதி மக்களுக்கு 40 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது அவர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் தண்ணீரை தேடி பொதுமக்கள் தோட்டங்களுக்கு படையெடுக்கின்றனர். மேலும் தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் வத்தலக்குண்டு–கொடைக்கானல் சாலையில் பழைய வத்தலக்குண்டு பிரிவு பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல் போராட்டத்தால் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசாரும், வத்தலக்குண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்