காட்டு யானையை விரட்ட வந்த கும்கி யானை

தேவாரம் வனப்பகுதியில் 7 பேரை கொன்ற காட்டு யானையை பிடிக்க கும்கி யானை வந்தது.

Update: 2018-07-30 21:45 GMT

தேவாரம், 

தேனி மாவட்டம் தேவாரம் வனப்பகுதியில், கடந்த 4 ஆண்டுகளாக ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. மலையடிவாரத்தில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது அந்த யானைக்கு வாடிக்கையாகி விட்டது. இதுமட்டுமின்றி விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளிகள் என இதுவரை 7 பேரை அந்த யானை கொன்றுள்ளது.

இதனால் தோட்டங்களுக்கு செல்வதற்கு விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். தற்போது தேவாரம் பகுதியில் உள்ள தோட்டங்களில் பயிரிட்ட நிலக்கடலையை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். அந்த யானையை விரட்டுவதற்கான முயற்சியில், தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் ஈடுபட்டார்.

குறிப்பாக கும்கி யானைகள் மூலம் காட்டு யானையை விரட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவை மாவட்டம் டாப்சிலிப் வனத்துறையினரிடம் கும்கி யானைகளை அனுப்புமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து கலீம், மாரியப்பன் ஆகிய 2 கும்கி யானைகளை தேவாரத்துக்கு அனுப்ப ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து உத்தரவு பிறப்பித்தார்.

அதன்பேரில் நேற்று முன்தினம் டாப்சிலிப்பில் இருந்து, லாரி மூலம் 52 வயதான கலீம் என்ற கும்கி யானை நேற்று தேவாரத்துக்கு வந்து சேர்ந்தது. மற்றொரு கும்கி யானை மாரியப்பன் இன்று (செவ்வாய்க்கிழமை) தேவாரத்துக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கும்கி யானைகள் தங்குவதற்கு, தேவாரம் தாழையூத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. கும்கி யானையுடன் சிறப்பு பயிற்சி பெற்ற வனத்துறையினர், 2 கால்நடை மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் என 50–க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.

இதேபோல் கும்கி யானைகளை வனப்பகுதிக்கு கொண்டு செல்வதற்கு 2 பாகன்களும், அட்டகாசம் செய்யும் காட்டு யானையின் வழித்தடங்களை கண்டறிந்த சிறப்பு பயிற்சி பெற்ற வேட்டை தடுப்பு காவலர்களும் தேவாரத்துக்கு வந்திருக்கின்றனர். மேலும் கும்கி யானைகள் விரும்பி சாப்பிடக்கூடிய பலாப்பழம், கத்தரிக்காய், தென்னை ஓலைகள், மூங்கில் இலைகள் ஆகியவை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:–

தேவாரத்தில் அட்டகாசம் செய்யும் காட்டு யானையை விரட்ட 2 கும்கி யானைகளை அழைத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு யானை மட்டும் வந்துள்ளது. மற்றொரு கும்கி யானை நாளை (இன்று) லாரி மூலம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்பிறகு உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதா? அல்லது மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதா? என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இங்கு வந்துள்ள கலீம் என்ற கும்கி யானை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் அட்டகாசம் செய்த 5–க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்