காதலன் வீட்டு வாசலில் பட்டதாரி பெண் தர்ணா

பெண்ணாடம் அருகே காதலன் வீட்டு வாசலில் அமர்ந்து பட்டதாரி பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

Update: 2018-07-30 21:45 GMT

பெண்ணாடம், 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள சவுந்திரசோழபுரத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. ஓய்வுபெற்ற கிராம நிர்வாக உதவியாளர். இவருடைய மகள் கனிமொழி(வயது 31). எம்.ஏ. பட்டதாரி. இவர், பெண்ணாடத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

சவுந்திரசோழபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் ஜானகிராமன்(32). இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் நல்லூர் ஒன்றிய மாணவரணி செயலாளராக உள்ளார். மேலும் பெண்ணாடத்தில் செங்கல்சூளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கனிமொழியும், ஜானகிராமனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கனிமொழி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலன் ஜானகிராமனிடம் கூறினார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இது குறித்து விருத்தாசலம் மகளிர் போலீசில் கனிமொழி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜானகிராமன் திடீரென தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கனிமொழி பல இடங்களில் ஜானகிராமனை தேடியும், அவரை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

மனமுடைந்த கனிமொழி நேற்று காலை சவுந்திரசோழபுரத்தில் உள்ள ஜானகிராமன் வீட்டுக்கு சென்றார். வீட்டில் இருந்த ஜானகிராமனின் பெற்றோரிடம், உங்கள் மகனை கண்டுபிடித்து எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூறினார். அதற்கு அவர்கள் சம்மதிக்க வில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கனிமொழி, காதலன் வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் பெண்ணாடம் போலீசார் விரைந்து சென்று கனிமொழியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு கனிமொழி, ஜானகிராமன் என்னை திருமணம் செய்து கொள்ளும்வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்றார். தொடர்ந்து அவர் அங்கேயே போராட்டம் நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்