புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டுமா?

தொழில்நுட்ப யுகமாக விளங்குகிறது இன்றைய காலம். எதிர்காலத்தில் தொழில்நுட்பங்களின் ஆதிக்கம் இன்னும் மிகுதியாக இருக்கும்.

Update: 2018-07-30 07:38 GMT
நாள்தோறும் உருவாகும் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வது பிரகாசமான எதிர்காலத்திற்கு அவசியம். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள உங்களிடம் என்ன திறமைகள் இருக்க வேண்டும்? என்ன பண்புகளை வளர்க்க வேண்டும்? என்பதை அறிந்து கொள்வோமா...

ஆர்வம்

தொழில்நுட்பங்கள் நமது வாழ்வை துரிதமாக்கவும், எளிமையாக்கவும் பிறந்தவை. அதை கற்றறிவது நமக்கு பல்வேறு வகையில் நன்மை பயக்கும் என்பதை முதலில் உணர வேண்டும். இந்த உணர்வானது தொழில்நுட்பத்தை கற்கும் ஆர்வத்தை மனதில் தூண்டும்.

இருந்த இடத்தில் இருந்து மின்கட்டணம் செலுத்த முடிந்தால் நேரில் சென்று, நேரத்தை வீணாக்கி வரிசையில் காத்திருக்க வேண்டாம். கடைசி நாள் வரை காலக்கெடு வைத்து, நேரமின்றி தவித்துக் கொண்டிருக்கவும் வேண்டாம். இது மட்டுமல்ல டிக்கெட் பதிவு செய்தல், பணம் அனுப்புதல், சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தல் என இன்று பெரும்பாலான பணிகளை தொழில்நுட்ப உதவியால் இருந்த இடத்திலேயே செய்து முடிக்க முடியும்.

சுற்றுலா சென்ற இடத்தில் கார் பார்க்கிங் எங்கு இருக்கிறது, எது பாதுகாப்பான தங்கும் விடுதி, சுவையான உணவு எங்கு கிடைக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை விரல் நுனியில் செல்போன்களை இயக்கி தெரிந்து கொள்ள முடியும். இதற்கு தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் திறமை அவசியம். அதை வளர்த்துக் கொள்ள நல்ல ஆர்வம் இருந்தால்தான் கற்றுக்கொள்ள முடியும். கற்றுக் கொண்டதுடன் நில்லாமல் அதை வாழ்வோடு இணைத்து செயல்படுத்திப் பழக வேண்டும். அப்போதுதான் ஒன்றை கற்றுக் கொண்டதன் பலன் பூர்த்தியாகும்.

எதிர்மறை எண்ணங்களை கைவிடுதல்

எல்லா விஷயங்களிலும் நன்மை, தீமை உண்டு. இணையதளத்தில் உலக விஷயங்கள் அனைத்தையும் தேடிக் கற்க முடியும். ஆனால் தேவையில்லாத தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் மூழ்கி பொழுதுபோக்குவது அவரவர் கையில்தான் உள்ளது. கத்தியை காய்கறி வெட்டப் பயன்படுத்துவது புத்திசாலித்தனம், கவனமாக இல்லாவிட்டால் கத்தி கையை பதம் பார்த்துவிடும். அதற்காக கத்தியைத் தொடமாட்டேன் என்பது புத்திசாலித்தனமாகுமா? எனவே தொழில்நுட்பங்களின் மோசமான பின்பக்கத்தை எண்ணி புறக்கணிப்பதைவிட, தேவைக்கு மட்டும் புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது நன்மை தரும். தீக்குச்சியை அடுப்பெரிக்க பயன்படுத்துவதா, வீட்டை கொளுத்த பயன்படுத்துவதா? என்பது உங்கள் கைகளில்தான் உள்ளது.

கூச்சத்தை கைவிடுதல்

கற்கும் விஷயத்தில் கூச்சம் தவிர்க்க வேண்டும். தொழில்நுட்ப விஷயங்களைப் பொறுத்தவரையில் இன்றைய இளைய தலைமுறையினர் அதிக விஷயங்களை அறிந்தவர்களாகவும், எளிதில் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்களாகவும் உள்ளனர். உதாரணமாக ஸ்மார்ட்போன்களில் அப்பா, தாத்தாவுக்கு தெரியாத விஷயங்களை பேரப்பிள்ளைகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

வயதான காலத்தில் ரோட்டிற்கு வந்து வாகனம் தேடி, பேரத்திற்கு படிய வைத்து பயணம் மேற்கொள்வதைவிட, வாசல் தேடி வாகனத்தை வரவழைத்து, எல்லோருக்கும் பொதுவான ஒரே கட்டணம் செலுத்துவது அதிக லாபமில்லையா? இதற்காக, இணைய தளம் வழியே உங்களுக்கான ஆட்டோ, கார்களை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதை பேரன் பேத்திகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் தவறில்லை. பெரியவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள்கூட தொழில்நுட்ப விஷயங்களை மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நிலையும் இருக்கிறது. எனவே கூச்சம் தவிர்த்து கற்கும் ஆர்வத்தை வளர்த்தால்தான் தொழில்நுட்பம் உங்களுக்கு வசப்படும். தொழில்நுட்ப விஷயங்களை அறிந்து கொள்ள சரியான ஆசிரியரை இனம் கண்டு, பயிற்சியில் சேர்ந்தோ, தனிநபர் பயிற்சியாக ஆசிரியரை நியமித்தோ கற்றுக் கொள்ளலாம்.

கேள்வி கேளுங்கள்...

கூச்சம் தவிர்ப்பதைப் போலவே எதையும் மனதில் மறைக்காமல் கேள்வி எழுப்பினால்தான் தொழில்நுட்பங்களில் ஆழ்ந்த அறிவு பெற முடியும். கேள்வியில் இருந்துதான் மனிதனின் தேடல் தொடங்கியது, தேடலுக்குப் பின்புதான் விடைகள் கிடைத்தன. இன்று இத்தனை தூரம் தொழில்நுட்பம் வளர்ந்திருப்பது ஒவ்வொரு கண்டுபிடிப்பாளரின் எண்ணத்தில் உதித்த கேள்வியும், அதற்கான தேடலும்தான். பூமியில் ஏன், இரவும் பகலும் ஏற்படுகின்றன? என்ற கேள்விதான் பூமியின் சுழற்சியை கண்டுபிடிக்க காரணமாக இருந்தது. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு வசதியையும் பயன்படுத்த நுட்பமான அறிவு வேண்டும். அவை அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டுமானால், ஒவ்வொன்றைப் பற்றியும் கேள்வி கேட்டு விடையை நன்கு விளங்கிக் கொள்வது அவசியமாகும்.

தவறு நேர்ந்தாலும் செயலை நிறுத்தாதே

‘ஒரு தவறும் செய்யாதவர்கள் ஒன்றுமே செய்யாதவர்கள்’ என்பார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ‘ஆயிரம் முறை தோற்றுப்போனதாக நீங்கள் நினைக்காதீர்கள், நான் ஆயிரம் (தவறுகளில்) வழிகளில் மின்சார விளக்கு சாத்தியமில்லை என்பதை கற்றுக் கொண்டதால் இன்று விளக்கை உருவாக்கி யிருக்கிறேன்’ என்றார் தாமஸ் ஆல்வா எடிசன். தொழில் நுட்பங்களைப் பொறுத் தவரையிலும் இதே நிலைப்பாடுதான். அனுபவமே ஒருவனை சிறந்த ஆசானாக்குகிறது என்பது இங்கு உண்மையாகும். நீங்கள் செய்யும் செய்முறை பயிற்சியும், நிகழும் தவறுகளும் நீங்கள் ஆழமான தொழில்நுட்ப அறிவைப் பெற உதவும். எனவே தவறுகளுக்குப் பயந்து எதையும் செய்யாமல் இருந்துவிடாதீர்கள்.

புதிய முயற்சிகள்

சில நேரங்களில் ஆசிரியர்கள் அடிப்படை விஷயங்களை மட்டுமே கற்றுத் தருவார்கள். நாம் பல விஷயங்களை தேடிப் படிக்க வேண்டியிருக்கும். தொழில்நுட்ப கல்வியிலும் நிறைய விஷயங்களை தேடித் தேடித்தான் கற்க வேண்டியிருக்கும். ஏனெனில் நாள்தோறும் புதிய தொழில்நுட்பங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இயங்குதளங்கள், அப்ளிகேசன்கள் அனைத்துக்கும் புதிய வெர்சன் தயாராகிக் கொண்டே இருக்கின்றன. புதிய பதிப்புகளில் உள்ள கூடுதல் விஷயங்களை நாமேதான் ஆராய்ந்து அறிந்து நமது தொழில்நுட்ப அறிவை மேம் படுத்திக் கொள்ள வேண்டும்.

பொறுமை

மேற்கண்ட அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொள்ள பொறுமையும், சகிப்புத்தன்மையும் அவசியமாகும். எல்லா விஷயங்களும் உடனே கிடைத்துவிடுவதில்லை. சிலவற்றுக்கு காத்திருக்க வேண்டும், சிலவற்றுக்கு அதிக உழைப்பு கொடுக்க வேண்டியிருக்கும், சில விஷயங்களுக்கு தியாகங்கள் தேவையிருக்கும், சில விஷயங்களுக்கு அதிக செலவு படிக்கும். எனவே எல்லாவற்றுக்கும் பொறுமையுடன் காத்திருந்து தமது அறிவையும், திறனையும் வளர்த்து முன்னேற வேண்டும்.

மேற்கண்ட திறன்களை வளர்த்து நாளைய தொழில்நுட்ப உலகில் நீங்களும் நிலைத்து நின்று வெற்றி பெற வாழ்த்துக்கள்! 

மேலும் செய்திகள்