குடிநீர் குழாய் பதித்ததில் ரூ.33 லட்சம் முறைகேடு: போலீசார் வழக்குப்பதிவு
குடிநீர் குழாய் பதித்ததில் ரூ.33 லட்சம் முறைகேடு தொடர்பாக பேரூராட்சி என்ஜினீயர் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
சேலம்,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தர்மபுரி மண்டல பேரூராட்சி என்ஜினீயர் ராமகிருஷ்ணன் (வயது 57). இவர் கடந்த 2015 முதல் 2017-ம் ஆண்டு வரை ஆத்தூர் நகராட்சி என்ஜினீயராக பணியாற்றினார். மேலும் கூடுதலாக ஆணையர் பொறுப்பும் வகித்து வந்தார். பணியில் இருந்த கால கட்டத்தில் குடிநீர் குழாய் பதித்தல் உள்பட பல்வேறு பணிகளில் முறைகேடு தொடர்பாக இவர் மீது புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.இதில், கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை, ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் அமைத்தல் உள்பட பல்வேறு பணிகளில் ரூ.33 லட்சம் வரை முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது.
மேலும் இந்த முறைகேட்டிற்கு, குடிநீர் குழாய் பதிக்க டெண்டர் எடுத்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த 3 பேர் மற்றும், நகராட்சி என்ஜினீயர் ஒருவர் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து என்ஜினீயர் ராமகிருஷ்ணன் உள்பட 5 பேர் மீது, போலி ஆவணம் தயாரித்தல், கையாடல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.