அரசு பொருட்காட்சி தொடக்க விழா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

அரசியல் ரீதியாக குற்றச்சாட்டுகளை தவிர, அரசின் திட்டங்கள் மீது எந்த குறையும் சொல்லமுடியாது என்று சேலத்தில் நடந்த அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2018-07-29 23:52 GMT
சேலம்,


சேலம் போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று இரவு நடைபெற்றது. விழாவிற்கு செய்தி-மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மக்கள் விரும்பும் தலைவர்களாக இருந்தார்கள். அவர்களின் ஆசியோடு தமிழகத்தில் சிறப்பான முறையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களுக்கு தேவையான திட்டங்கள் என்ன? என்பதை கண்டறிந்து தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட சில தலைவர்கள் இந்த அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்பாக பா.ம.க. இளைஞர் அணி தலைவராக உள்ள அன்புமணி ராமதாஸ், மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தார். அப்போது அவரது காலத்தில் இந்த மக்களுக்கு என்ன செய்தார்? என்ன திட்டங்களை கொண்டு வந்தீர்கள்? என்று கூறமுடியுமா?. அதுமட்டுமின்றி வன்னிய சமுதாய மக்களுக்கு என்ன செய்தீர்கள்?. வன்னிய சமுதாயத்தை சேர்ந்த கொடையாளர்கள் அரசுக்கு தானமாக வழங்கிய சொத்துக்களை முறையாக பாதுகாக்க முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதனால் அரசுக்கு நன்கொடையாக வழங்கிய சொத்துகளை பாதுகாக்க சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வன்னிய சமுதாயத்திற்காக பாடுபட்ட ராமசாமி படையாச்சியாருக்கு அரசு சார்பில் மணி மண்டபம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளேன். இதனால் வன்னிய சமுதாய மக்களுக்கு யார்? நன்மை செய்தார்கள்? என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வன்னிய மக்கள் மீது இந்த அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.

ஆனால் சிலர் வேண்டும் என்றே அரசியல் காரணங்களுக்காகவும், சுயலாபத்திற்காகவும் இந்த அரசு மீது விமர்சனம் செய்கிறார்கள். அரசியல் ரீதியாக குற்றச்சாட்டுகளை தவிர அரசின் திட்டங்கள் மீது எந்த குறையும் சொல்லமுடியாது. மக்களுக்கு என்ன தேவை? என்ன தேவையில்லை? என்பதை எனக்கு நன்றாக தெரியும். அதன்படி தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தாலிக்கு தங்கம், பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம், பசுமை வீடு, கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடனுதவி, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் சட்ட போராட்டத்தின் விளைவாக தற்போது மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காகவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

மேலும் செய்திகள்