மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வர வேண்டும்

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் முகைதீன் கூறினார்.

Update: 2018-07-29 22:35 GMT
நெல்லை,


இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நலம் விசாரிப்பதற்காக கோபாலபுரத்துக்கு சென்றேன். அப்போது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தலைவர் கருணாநிதியின் உடல் நலம் சீராக இருப்பதாக கூறினார்.

கருணாநிதி தி.மு.க. தலைவர் மட்டும் அல்ல. அவர் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் பாதுகாவலர், சிறந்த அரசியல்வாதி, திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர், தேசிய அளவில் சிறந்த தலைவர். கருணாநிதி, நமது நாட்டுக்கே வழிகாட்டியாக திகழ்பவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர் பூரண நலம் பெற்று மீண்டும் திரும்பி வர வேண்டும். இதற்காக அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

உடல் நலக்குறைவில் இருக்கும் கருணாநிதியை தமிழக அமைச்சர்கள் பார்த்து செல்வதும், அவருக்கு மருத்துவ வசதி செய்ய தயார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருப்பதும், நீண்ட காலத்துக்கு பிறகு அரசியல் நாகரீகம் துளிர் விடுவதை காட்டுகிறது. இந்த அரசியல் நாகரீகம் தொடர வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். கோரிக்கைகளுக்காக போராடும் மக்களை அழைத்து பேசுவதற்கு மத்திய-மாநில அரசுகள் முன்வருவது இல்லை. மக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசுகள் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. சொத்துவரி அதிக அளவு உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த ஆட்சியாளர்களால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வர வேண்டும்.

இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன் கூறினார்.

அப்போது கட்சியின் மாவட்ட தலைவர் எல்.கே.எஸ்.மீரான் மைதீன், செயலாளர் பாட்டப்பத்து முகமது அலி, இளைஞர் அணி செயலாளர் கடாபி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்