2 வேன்கள்- கார் மோதல்; 9 பேர் காயம்
நெல்லையில் அடுத்தடுத்து 2 வேன்கள்- கார் மோதிய விபத்துகளில் 9 பேர் காயம் அடைந்தனர்.;
நெல்லை,
நெல்லை அருகே உள்ள மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று காலையில் ஒரு வேனில் கோவிலுக்கு சென்று விட்டு, நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக திரும்பி சென்று கொண்டிருந்தனர். இந்த வேனுக்கு பின்னால், நெல்லை பாலாமடையைச் சேர்ந்த சிலர் மற்றொரு வேனில் பெருமாள்புரம் கிறிஸ்தவ ஆலயத்தில் பிரார்த்தனை செய்து விட்டு, திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
இந்த 2 வேன்களும் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தன. அப்போது நெல்லை தருவையைச் சேர்ந்த திருமலை என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் சென்ற வேனில் நேருக்கு நேர் மோதியது.
இதையடுத்து அந்த வேனின் பின்னால் பாலாமடையைச் சேர்ந்தவர்கள் வந்த வேனும் மோதியது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்துகளில் திருமலை உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்களை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்துகளால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.