பனிமயமாதா ஆலய திருவிழா: சாதாரண உடையில் போலீசார் தீவிர கண்காணிப்பு
பனிமயமாதா ஆலய திருவிழாவையொட்டி தூத்துக்குடியில் குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்காக சாதாரண உடையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா கூறினார்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவையொட்டி போலீஸ் சார்பில் ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு நீர், மோர், பிஸ்கட் வழங்குவதற்காக ஆலயம் அருகே நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் கலந்து கொண்டு நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பங்குதந்தை லெரின் டிரோஸ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறியதாவது:-
பனிமயமாதா ஆலய திருவிழாவையொட்டி தூத்துக்குடியில் 4 புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. புகார் பெட்டி, ஆலோசனை பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் எந்த ஒரு புகார், ஆலோசனைகளையும் அதற்கென வைக்கப்பட்டு உள்ள பெட்டிகளில் போடலாம். ஆலயத்துக்கு வரும் மக்கள் வசதிக்காக போலீஸ் சார்பில் தண்ணீர் பாட்டில், பிஸ்கட், மோர் வினியோகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து வருகிற 5-ந் தேதி வரை பக்தர்களுக்கு நீர், மோர் வினியோகம் செய்யப்படும்.
திருவிழா பாதுகாப்பு பணியில் சுமார் 1000 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். 66 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குற்ற செயல்களை தடுப்பதற்காக சாதாரண உடையில் 9 போலீஸ் குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை எந்தவித சிறு அசம்பாவிதமும் நடைபெறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.