ஏரி, குளங்களில் நீரை சேமிக்க கால்வாய்களை தூர்வார வேண்டும்

ஏரி, குளங்களில் நீரை சேமிக்க கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் நடந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-07-29 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சமூக நல்லிணக்க மாநாடு கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள தீரன் சின்னமலை திடலில் நேற்று மாலை நடந்தது. மாநாட்டில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

தென்மேற்கு பருவமழை மற்றும் காவிரி உபரிநீரால் அணைகள் நிரம்பி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே அனைத்து பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் நிலத்தடி நீரை மேம்படுத்த கால்வாய்களை தூர்வார வேண்டும். சமூக நீதி அடிப்படையில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் உள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் அந்த சமுதாய ஏழை மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

டீசல், பெட்ரோல் விலை உயர்வுகளை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வந்து விலைவாசி உயர்வை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓசூரில் விமான நிலையம் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி, வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும். கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை 20 கிலோ மீட்டர் தூரம் தள்ளி அமைக்க வேண்டும்.

மா விலை குறையும் போது விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். பால் விலையை 6 மாதங்களுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும். ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரெயில் பாதை அமைக்க மத்திய ரெயில்வே அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி பூரண உடல் நலம் பெற்று மீண்டும் அரசியல் பணி மேற்கொள்ள வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது.

இதில் மாநாட்டு குழு தலைவரும், கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவருமான பி.அண்ணாத்துரை, மாநில கொள்கை பரப்பு செயலாளர் அசோகன், மாவட்ட செயலாளர்கள் வஜ்ஜிரவேல், செல்வராஜ், கட்சி நிர்வாகிகள் வேலுசாமி, அசோகன், சூரியமூர்த்தி, தங்கவேலு, சிறப்பு பேச்சாளர் கோவை ரத்தின சபாபதி, அவைத் தலைவர் கமலேசன், நகர தலைவர் கருணாகரன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்