பிளாஸ்டிக் இல்லாத மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

பிளாஸ்டிக் இல்லாத தர்மபுரி மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புதுறை ஆணையர் அமுதா வலியுறுத்தினார்.

Update: 2018-07-29 22:45 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை ஒழிப்பது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புதுறை ஆணையரும், சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளருமான அமுதா தலைமை தாங்கினார். கலெக்டர் மலர்விழி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் வரவேற்றார்.

கூட்டத்தில் உணவு பாதுகாப்புதுறை ஆணையர் அமுதா பேசியதாவது:-

பிளாஸ்டிக் பொருட்களால் காற்று, நீர், நிலம் மாசுபடுகிறது. பொதுமக்கள் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வரும் போது பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும். முந்தைய வாழ்க்கை பழக்கத்திற்கு சென்றால் தான் நாம் இயற்கையை பேணிக்காக்க முடியும். முதலில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். நாம் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து மாற வேண்டும். அப்போதுதான் நம்மை பார்த்து மற்றவர்கள் மாறுவார்கள். பிளாஸ்டிக் இல்லாத தர்மபுரி மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் மனமாற்றம் ஒன்றே தீர்வாக அமையும். அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் ஓட்டிகள், மீன் சமைப்பவர்கள், மசாஜ் செய்பவர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வரும் வாகனங்களை ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்த்து துணி பைகள் பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கவிதா, உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர். பிருந்தா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சிவருத்ரப்பா, நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகுமார், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ஜீஜாபாய், உதவி இயக்குநர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்