காய்ந்து கிடக்கும் வைகையில் தண்ணீர் ஓடுவது எப்போது? ஏக்கத்தில் மதுரை மக்கள்
காய்ந்து கிடக்கும் வைகையில் தண்ணீர் ஓடுவது எப்போது என்பதே மதுரை மக்களின் ஏக்கமாக உள்ளது.
மதுரை,
தமிழகத்தில் தாமிரபரணி, காவிரி, வைகை ஆகியவை 3 முக்கிய ஆறுகளாகும். இவற்றில் காவிரி ஆறு கர்நாடகாவில் பெய்யும் மழையை நம்பி உள்ளது. தற்போது கர்நாடகாவில் பெய்யும் தென்மேற்கு பருவ மழை காரணமாக அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பி, காவிரி ஆற்றில் தற்போது நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் திருச்சி, தஞ்சை உள்பட டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே போல் தாமிரபரணி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் ஒரளவு நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் நெல்லை மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வைகை ஆற்றை பொறுத்தவரை பெரியாறு அணையை நம்பி இருக்கிறது. ஆனால் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதியளவு மழை பெய்ய வில்லை. இருப்பினும் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது நல்ல மழை பெய்து இருக்கிறது. ஆனாலும் பெரியாறு அணை தனது அளவான 152 அடியை இன்னும் எட்டவில்லை. தற்போது அணையின் நீர்மட்டம் 136 அடியை மட்டுமே எட்டி உள்ளது. மேலும் வைகை அணையும் தனது முழு அளவான 72 அடியில் இருந்து 55 அடியை மட்டுமே தற்போது வரை எட்டி உள்ளது. முழு அளவை எட்டியவுடன் மட்டுமே அணையில் இருந்து நீர் திறந்து விடப்படும். அப்போது தான் வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஆனால் விவசாயத்திற்காக தற்போது பெரியார் பாசன கால்வாயில் மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வைகை ஆறு காய்ந்து கிடப்பதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வறட்சியாக உள்ளன. நிலத்தடி நீர் மட்டமும் பாதாளத்தில் உள்ளன. காவிரி–தாமிரபரணியில் வெள்ளம் என்ற செய்தியறிந்த மதுரை மக்கள் வைகை ஆற்றில் குறைந்த அளவாவது தண்ணீர் ஓடுமா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.
இது குறித்து மதுரை மக்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:–
சிம்மக்கல் முதியவர் கிருஷ்ணன்:– ஆறு என்றால் எப்போதும் தண்ணீர் ஓட வேண்டும். ஆனால் வைகை ஆற்றில் ஆண்டுக்கு 10 நாட்கள் முழுமையாக தண்ணீர் ஓடுவதில்லை. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் ஓடியது. அப்போது முழுமையாக 20 நாட்கள் கூட ஓட வில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு வைகை ஆற்றில் தண்ணீர் ஓடிய போது தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. அந்த காட்சி திரும்ப எப்போது வரும் என்ற ஏக்கத்தில் உள்ளேன்.
கே.கே.நகர் ராஜேஷ்:–
எனது மகனுக்கு 6 வயது இருக்கும் போது வைகை ஆற்றில் தண்ணீர் ஓடும் காட்சியை காண்பித்தேன். தற்போது அவனுக்கு 13 வயது ஆகிவிட்டது. ஒவ்வொரு தடவையும் ஆற்றுப்பாலத்தை கடக்கும் போதெல்லாம் தண்ணீர் எப்போது ஓடும் என்று கேட்டு கொண்டே இருக்கிறான். காவிரியின் தண்ணீர் ஓடும் செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தாலும், வைகை ஆற்றில் தண்ணீர் ஓட வில்லையே என்று வருத்தமாக தான் உள்ளது.