கோத்தகிரி மூனுரோடு பகுதியில் பேரிக்காய் மரத்தில் ஓய்வெடுத்த கரடி
கோத்தகிரி மூனுரோடு பகுதியில் தேயிலை தோட்டங்களுக்கு இடையே உள்ள ஒரு பேரிக்காய் மரத்தில் கரடி ஒன்று ஓய்வெடுத்து கொண்டிருந்தது. இதை பார்த்த பசுந்தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.;
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை, புலி, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்து உள்ளது. குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் வனவிலங்குகள் சுற்றித் திரிவதால், அடிக்கடி மனித–வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. வனப்பகுதியையொட்டி சொகுசு பங்களா மற்றும் வனவிலங்ககளின் வழித்தடங்களை மறித்து கட்டிடங்கள் கட்டப்படுவதால் கோத்தகிரி சுற்று வட்டார குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்கள் வனவிலங்குகளின் சரணாலயமாக மாறி வருகிறது. வனவிலங்குகளை காண சரணாலயங்களுக்கு சென்ற காலம் மாறி, தற்போது நகரின் முக்கிய பகுதிகளிலேயே வனவிலங்குகளை பொதுமக்கள் எளிதாக காண முடியும் என்ற சூழல் உருவாகி விட்டது. மேலும் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினரும் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் கோத்தகிரி அரவேனு அருகே மூனுரோடு பகுதியில் தேயிலை தோட்டங்களில் ஊடு பயிராக பேரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது மரங்களில் பேரிக்காய் காய்த்து குலுங்குகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக அந்த பேரிக்காய்களை தின்பதற்காக கரடிகள் அங்கு முகாமிட்டு உள்ளன. நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் மூனுரோடு பகுதியில் இருந்து கேத்தரின் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் தனியார் தேயிலை தொழிற்சாலை அருகிலுள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பேரிக்காய் மரத்தில் கரடி ஒன்று ஓய்வெடுத்து கொண்டிருந்தது. மேலும் அவ்வப்போது பேரிக்காய்களை பறித்து தின்றது. அப்போது தங்களது அருகில் உள்ள மரத்தில் கரடி இருப்பதை திடுக்கிட்டு பார்த்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கடந்த சில மாதங்களாக கேசலாடா, கேத்தரின் நீர்வீழ்ச்சி, காமராஜர் நகர், புதூர் உள்ளிட்ட அரவேனு சுற்றுவட்டார குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே அவற்றால் தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன், கரடிகளின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவோ? அல்லது கூண்டு வைத்து பிடிக்கவோ? வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.