தலைமை ஆசிரியை வீடு உள்பட பல்வேறு இடங்களில் கைவரிசை: கொள்ளையனாக மாறிய போலீஸ்காரர் கூட்டாளியுடன் கைது

போலீஸ்காரராக இருந்து பின்னர் கொள்ளையனாக மாறி பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியவரையும், அவருடைய கூட்டாளியையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 52 பவுன் நகைகள் மீட்கப்பட்டு உள்ளன.

Update: 2018-07-30 00:15 GMT

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் எஸ்.என்.புரம் சிவகாசி கணேசன் காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 46). அவருடைய மனைவி சுந்தரலட்சுமி. தனியார் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 25–ந் தேதி காலையில் வழக்கம் போல் கணவன், மனைவி இருவரும் பணி தொடர்பாக வெளியே சென்று விட்டனர். மாலை 6 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பிய தலைமை ஆசிரியை சுந்தரலட்சுமி, கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பீரோவில் வைத்திருந்த வைர நெக்லஸ், வைர கம்மல் மற்றும் தங்கநகைகளும், ரூ.5 ஆயிரமும் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தினர். வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளையர்களை போலீசார் தேடிவந்தனர்.

இதற்கிடையே திருத்தங்கல் போலீசார், சிவகாசி–விருதுநகர் ரோட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வாகன சோதனை செய்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது சந்தேகம் அடைந்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களுக்கு, தலைமைஆசிரியை சுந்தரலட்சுமி வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. விசாரணையில் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வ.புதுப்பட்டியை சேர்ந்த கண்ணன்குமார் (32), தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த அக்பர்அலி (38) என்று தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் விருதுநகர் பாண்டியன்நகர், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, கிருஷ்ணன்கோவிலில் 2 இடங்கள் மற்றும் திருத்தங்கல் என பல்வேறு ஊர்களில் வீடு புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த 52 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

கைதான கண்ணன்குமார் 2008–ல் போலீஸ்காரராக பணியில் சேர்ந்து சென்னை எண்ணூரில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற வாலிபர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

அவர் சிறையில் இருந்த போது, திருட்டு வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த அக்பர்அலியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்து கூட்டணி அமைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

கொள்ளையனாக மாறிய போலீஸ்காரர் கூட்டாளியுடன் பிடிபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்