போலீஸ்காரர் வீட்டின் முன்பு மனைவி தர்ணா
3-வது திருமணம் செய்ததால், போலீஸ்காரர் வீட்டின் முன்பு 2-வது மனைவி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் அஜ்மல்கான். இவர், கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர், ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றவர். இதையடுத்து கடந்த 2001-ம் ஆண்டு கம்பத்தை சேர்ந்த பரகத்நிஷா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த ஆண்டு அஜ்மல்கான், கெங்குவார்பட்டியை சேர்ந்த பெண் ஒருவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டு கூடலூரில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த பரகத்நிஷா, நேற்று முன்தினம் கணவர் வசிக்கும் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். நேற்று 2-வது நாளாகவும் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, முறைப்படி விவாகரத்து பெறாமல் 3-வது திருமணம் செய்த தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தான் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.