திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் தெற்கு தொகுதி பா.ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-07-29 22:00 GMT

திருப்பூர்,

பா.ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு தொகுதி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, தெற்கு தொகுதி சட்டமன்ற அமைப்பாளர் காடேஸ்வரா தங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சின்னசாமி, மாநில துணை தலைவர்கள் அரசுகுமார், சிவகாமி பரமேஸ்வரன், கோட்ட இணை பொறுப்பாளர் பாயிண்ட் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், திருப்பூருக்கு மத்திய அரசு அறிவித்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்து வகையில் உயர்த்தப்பட்டுள்ள வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பாலித்தீன் பொருட்களை மாவட்டம் முழுவதும் தடை செய்ய வேண்டும். பழைய பஸ்நிலையம் அருகே நடைபெற்று வரும் பாலப்பணிகளை முடிக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் சாக்கடை கால்வாய் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். வாரம் இரு முறை குழாய் மூலம் குடிநீர் வழங்க வேண்டும். தெரு விளக்குகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்