இந்தியாவிலேயே முதல்முறையாக அறிமுகம்: சாதனை படைக்கும் ‘ஸ்மார்ட் சிவகங்கை’ செயலி

ஸ்மார்ட் போன்கள் வைத்திருப்பவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று ‘ஸ்மார்ட் சிவகங்கை’ செயலியை பதிவிறக்கம் செய்து பயன் படுத்தலாம்.

Update: 2018-07-29 23:15 GMT

சிவகங்கை,

வளர்ந்து வரும் நவீன உலகில் தற்போது அனைத்து செயல்பாடுகளும் கணினிமயமாகிவிட்டது. இதில் அரசு துறைகளும் விதிவிலக்கல்ல. அரசு பேப்பர் லெஸ் அலுவலகம் என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஒவ்வொரு துறையும் தங்களது துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும் போது அத்துறையின் இணையதளத்தை பயன்படுத்த அறிவிப்புகள் தரும். இதில் அடுத்த மைல்கல்லாக சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து அரசு துறைகளும் ஒரே செயலியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த செயலி முறை இந்தியாவிலேயே சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் தான் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஸ்மார்ட் சிவகங்கை’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த செயலியை கூகுள் இணையதள தேடல் மூலமாக பயன்படுத்தலாம். அத்துடன் ஸ்மார்ட் போன்கள் வைத்திருப்பவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று இந்த செயலியை பதிவிறக்கம் செய்தும் பயன் படுத்தலாம். இந்த செயலியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறைகள் குறித்தும், அவைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களை பெற இந்த செயலி மூலமாகவே விண்ணப்பிக்கவும் முடியும். இதில் தற்போது ஒவ்வொரு துறைகளிலும் ஏற்படும் தற்காலிக பணியிடங்கள் குறித்த விவரங்களும் வெளியிடப்படுகின்றன. அந்த வேலைகளுக்கு இந்த செயலி மூலமாக விண்ணப்பிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த செயலி குறித்து மாவட்ட கலெக்டர் லதா கூறியதாவது:–

இந்த ‘ஸ்மார்ட் சிவகங்கை’ செயலி உருவாக காரணம் அனைவரின் கூட்டுமுயற்சியே. வழக்கமாக குறைதீர் கூட்டங்கள் நடத்தும்போது பொதுமக்கள் தங்களுக்கு பல்துறைகளில் விண்ணப்பம் கிடைக்கவில்லை என்று தெரிவிப்பார்கள். இதற்கு என்ன செய்யலாம் என்று குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி மைய பேராசிரியர் திரு மற்றும் தேசிய தகவல் மையம் பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளனர். ஸ்மார்ட் போனில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும்போது ‘ஸ்மார்ட் சிவகங்கா, கலெக்ட்ரேட் ஆப் சிவகங்கை டிஸ்ட்ரிக்ட்’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பொதுவாக மாவட்ட நிர்வாகத்தின்கீழ் 46 அரசு துறைகள் உள்ளன. இந்த துறைகளில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று தெரிந்து கொள்ள அந்தந்த துறைகளின் இணையதளத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதுதவிர அரசு விடுதிகளில் மாணவ–மாணவிகள் சேர்க்கைக்கு சம்பந்தப்பட்ட விடுதி வார்டன் அல்லது அந்த அலுவலகத்திற்கு சென்று தான் வாங்க வேண்டும். பலமுறை ஏதாவது ஒரு காரணத்தால் விண்ணப்பம் பெற முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இதுபோன்ற நேரங்களில் தகுதியுள்ள பல மாணவ–மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்று அரசு துறைகளில் அறிவிக்கப்படும் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவே பொதுமக்கள் இடைதரகர்களிடம் பணம் கொடுத்து பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறான பல பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக இந்த செயலியில் ஒரு துறை சார்பில் வேலைக்கு அறிவிப்பு வெளியிடும்போது அதிலேயே உரிய விண்ணப்பம் இருக்கும். அத்துடன் விண்ணப்பிக்கும் போது இந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கபட்டதா அல்லது காத்திருப்பில் உள்ளதா என்ற விவரமும் வந்துவிடும். இதனால் விண்ணப்பத்தின் நிலை குறித்து எந்தவிதமான சந்தேகமும் எழாது. தற்போது அரசு தொடர்பாக எந்தவொரு அறிவிப்பு வெளியிட்டாலும், அதில் ‘ஸ்மார்ட் சிவகங்கை’ செயலி மூலம் விண்ணப்பிக்கவும் என்றே அறிவித்து வருகிறோம். தற்போது இதில் 24 துறைகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மற்ற துறைகளையும் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்