பெண்ணின் மொபட்டை தீவைத்து எரித்த கட்டிட தொழிலாளி கைது

பெண்ணின் மொபட்டை முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் எடுத்துச்சென்று தீவைத்து எரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-07-29 21:45 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள பேராவூர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி அஸ்வினி(வயது35). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சசிக்குமார்(35). கட்டிட தொழிலாளியான இவருக்கும் அஸ்வினி குடும்பத்தினருக்கும் கழிவு நீர் செல்வது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இததொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 5–ந் தேதி இரவு அஸ்வினி தனது மொபட்டினை வீட்டின் முன்பகுதியில் நிறுத்திஇருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மொபட்டினை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்து தேடிபார்த்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் பேராவூர் எம்.ஜி.ஆர்.நகர் கருவேலமர காட்டு பகுதியில் அஸ்வினியின் மொபட் எரிந்த நிலையில் கிடப்பது குறித்து தகவல் தெரிந்து அவர், இதுகுறித்து கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தார். இந்த விசாரணையில் சசிக்குமார் முன்விரோதம் காரணமாக மொபட்டினை நள்ளிரவில் எடுத்துச்சென்று மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துஎரித்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைதுசெய்தனர்.

மேலும் செய்திகள்