“தமிழகத்தில் கோவில் சொத்துகள் கொள்ளை” ராம.கோபாலன் குற்றச்சாட்டு

சென்னையில் இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், “தமிழகத்தில் கோவில் சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது”, என்று ராம.கோபாலன் குற்றம் சாட்டினார்.

Update: 2018-07-29 22:45 GMT
சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் விடுவிக்கப்பட வேண்டும், கோவில்களில் வழிபாட்டு கட்டண முறையை ரத்து செய்யக்கோரியும் இந்து முன்னணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் க.பக்தவத்சலம், மாநகர தலைவர் ஏ.டி.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது ராம.கோபாலன் நிருபர்களிடம் கூறுகையில், “நமது முன்னோர்கள் தங்களது சொத்துகளை கோவில்களுக்கு எழுதிகொடுத்து புண்ணியம் தேடிக்கொண்டனர். ஆனால் பாவிகள் அதை கொள்ளையடித்து வருகின்றனர். தமிழகத்தில் கோவில் சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. கோவில் நிர்வாகம் சீர்கெட்டு இருக்கிறது. கோவில் பாதுகாப்பே தமிழர்கள் கடமை”, என்றார். மாநில அமைப்பாளர் க.பக்தவத்சலம் கூறியதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அசையும், அசையா சொத்துவிவரம் வெளியிடப்படவில்லை. கோவில் நிலங்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அளவில் களவாடப்பட்டு விட்டன. சிலைகளும் திருடப்பட்டு உள்ளன. கோவில்களில் கடவுளை தரிசிக்க கட்டணம் என்ற பாகுபாடு நிலை உள்ளது. கற்பூரம் காட்டி வழிபடவும் தடை உள்ளது. இதையெல்லாம் எதிர்த்தும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் 500 இடங்களில் இன்று (நேற்று) இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்