காணாமல் போன நிலா-சுபா
தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருணும், பூர்ணிமாவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவரும் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று வீட்டுமனையை பரிசாகபெற்று, அங்கு புது வீடு கட்டி குடியேறினார்கள்.;
முன்கதை சுருக்கம்:
தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருணும், பூர்ணிமாவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவரும் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று வீட்டுமனையை பரிசாகபெற்று, அங்கு புது வீடு கட்டி குடியேறினார்கள். வீட்டின் ஒரு பகுதியில் அருணுடன் போட்டியில் பங்கேற்ற முத்ராவும், மற்றொரு வீட்டில் சுந்தரம் என்பவரும் வாடகைக்கு வசிக்கிறார்கள். கர்ப்பிணியாக இருக்கும் பூர்ணிமாவுக்கு உதவியாக இருப்பதற்கு அவளை வளர்த்து ஆளாக்கிய தாயம்மா கிராமத்தில் இருந்து வருகிறாள். முத்ராவால் அருண் குடும்ப வாழ்க்கையில் குழப்பம் உருவாகிறது. சுந்தரமும் பாதிப்புக்குள்ளாகிறார்.
முத்ராவை வீட்டை காலி செய்ய வைப்பதற்காக, அவள் வீட்டுக்கு செல்லும் தண்ணீர் குழாய் வால்வை அருண் மூடுகிறான். அவளோ அருண் வீட்டிற்குள் நுழைந்து குளிப்பதோடு, குடிநீர் தொட்டிக்குள் குப்பைகளை கொட்டி பிரச்சினையை அதிகப்படுத்துகிறாள். இந்த நிலையில் பூர்ணிமாவின் செல்போனுக்கு அவர்களது படுக்கை அறை காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வருகிறது. அந்த வீடியோவின் பின்னணியில் முத்ரா இருப்பது தெரியவருகிறது. வீடியோவை அழிக்க வேண்டுமானால் மேலே உள்ள அபார்ட்மெண்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு மிரட்டிவிட்டு வெளியூர் செல்கிறாள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நண்பன் கொடுத்த யோசனையின்படி கதவின் பூட்டை மாற்றுகிறான். முத்ராவோ போலீசாரின் உதவியுடன் கதவை திறக்கிறாள். வீடியோவை வெளியிட்டு விடுவதாக அருணை மிரட்டவும் செய்கிறாள். இதையடுத்து அருண் நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுக்கிறான்.
மாலைச் சூரியன் தொடுவானத்தில் ஆரஞ்சு வண்ணத்தைத் தீட்டியிருந்தது.
தாயம்மா தோட்டத்துச் செடிகளுக்கு பூவாளிகொண்டு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தாள்.
சற்றுத் தள்ளி, தேவகி தன் பிஞ்சுக்கையால் இலைக்குப்பைகளை அள்ளி உரமாக ரோஜாச் செடிக்குக் கீழே போட்டுக்கொண்டிருந்தது.
தாயம்மாவை சிறு வெறுப்புடன் பார்த்தபடி, மாடியில் பால்கனியில் நின்றிருந்தாள், முத்ரா. கிராமத்திலிருந்து வந்தவளுக்கு என்ன திமிர் இருந்தால், தன்னைக் கண்டு அஞ்சாமல் ‘உன் முகத்தில் விழித்ததற்கு இரண்டு தடவை குளிக்க வேண்டும்’ என்று கேலி பேசுவாள் என்று முத்ராவின் மனம் பொருமியது.
அவள் மனதில் ஒரு திட்டம் உருவாகிக்கொண்டிருப்பது தெரியாமல், அந்த பால்கனிக்கு நேர் கீழே இருந்த தோட்டப்பகுதியில் செடிகளுக்கு நீர் ஊற்றியபடி தாயம்மா குனிந்திருந்தாள்.
பால்கனியில் சிறு பூந்தொட்டிகள் இருந்தன. அவற்றில் சில செடிகள் வளர்ந்திருந்தன. ஒரு பூந்தொட்டி மட்டும் பால்கனி சுவரின் மேலேயே வைக்கப்பட்டிருந்தது. சுவரில் இருந்த அந்தப் பூந்தொட்டியை முத்ரா மெல்ல எடுத்தாள். குறிபார்த்து தாயம்மா மீது அதை வீசிவிட்டு முத்ரா சட்டென்று அவள் பார்வையில் படாத இடத்துக்கு நகர்ந்துவிட்டாள்.
பூந்தொட்டி குனிந்திருந்த தாயம்மாவின் பின்கழுத்தில் மோதி எகிறி தரையில் விழுந்து சிதறியது. அதில் நிரப்பப்பட்டிருந்த மண்ணும், உரமும், வேர் பிடித்திருந்த செடியும் சிதறிப் பரவின.
தாயம்மா பூவாளியைப் போட்டுவிட்டு அப்படியே சுருண்டு விழுந்தாள்.
தேவகி சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தது. கிட்டே வந்து பார்த்தபோது, தாயம்மாவின் நெற்றியிலிருந்து ரத்தம் வழிவதைப் பார்த்து நிலைமை புரிந்து மாடிக்கு ஓடியது.
* * *
அருணும், பூர்ணிமாவும் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது, கல்பனாவும், தேவகியும் தாயம்மாவின் அருகில் குனிந்திருந்தார்கள்.
“என்னாச்சு..?” என்று பதறியபடி பைக்கை சைடு ஸ்டாண்டில் போட்டுவிட்டு, அருண் ஓடிவந்தான்.
தாயம்மா பேச்சு மூச்சின்றிக் கிடந்தாள். கீழே விழுந்ததில் சிறு கல்முனை குத்தி நெற்றிப் பொட்டிலிருந்து ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. கீழே விழுந்து சிதறிக்கிடந்த பூந்தொட்டியைப் பார்த்ததும், அருணுக்கு விவரம் புரிந்தது.
“தொட்டி தவறி விழுந்து மண்டைல மோதியிருக்கு போல இருக்கு..” என்று சொல்லியபடி அண்ணாந்து பார்த்தான். முத்ராவின் பால்கனியைப் பார்த்ததும், முகத்தில் கோபம் வந்தது.
“தவறி விழுந்திருக்காது.. முத்ராவே வேணும்னு போட்டாலும், போட்டிருப்பா..” என்று சொல்லிவிட்டு, “ஏய், முத்ரா..” என்று அங்கிருந்தே இரைந்து கூப்பிட்டான்.
ஜன்னல் திரையைச் சற்றே விலக்கி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த முத்ரா திரையை மூடிவிட்டு புன்னகையுடன் உள்ளே போய்விட்டாள்.
“இப்ப யார்கூடவும் சண்டைக்குப் போக வேணாம்.. முதல்ல தாயம்மாவை கவனிப்போம்..” என்று பூர்ணிமா பதறினாள்.
அருண் பூவாளி எடுத்து, தாயம்மா முகத்தில் தண்ணீரை வாரித் தெளித்தான். ஆனால், தாயம்மாவிடம் அசைவில்லை என்றபோது, அச்சம் வந்தது.
“ஆஸ்பத்திரிக்கு எடுத்துப்போயிடலாம், அருண்..” என்றபோது, பூர்ணிமாவின் குரலில் அழுகை சேர்ந்திருந்தது.
* * *
மருத்துவர் முதலுதவி கொடுத்து முதலில் தாயம்மாவின் நெற்றியிலிருந்து கசியும் ரத்தத்தை நிறுத்தினார்.
கிட்டத்தட்ட பத்து நிமிட முயற்சிக்குப் பிறகு, தாயம்மா இமைகளைத் திறந்தாள். அருணும் பூர்ணிமாவும் கலக்கத்துடன் நிற்பதை புன்னகைக்கப் பார்த்தாள். ஆனால், புன்னகை மலரவில்லை. வலியின் வேதனையில் முகம் சுளித்தாள்.
“பின்மண்டைல பாரம் மோதியதுல மூளை ஸ்தம்பிச்சுப்போயிருக்கும்.. அதிர்ச்சியில மயக்கமாகியிருப்பாங்க.. நல்லவேளை வாந்தி எடுக்கல.. எடுத்தா நிலைமை சீரியசாயிருக்கும்..” என்று மருத்துவர் விளக்கம் கொடுத்தார்.
வேறு சில பரிசோதனைகளும் செய்துபார்த்துவிட்டு, “பின் கழுத்துல ரத்தம் கட்டியிருக்கு.. மூளைக்குப் போற ரத்தக் குழாய்ல அடைப்பு வந்தா பெரிய பிரச்சினை ஆயிடும்.. உடம்புல ஒரு பக்கம் இயங்காமலேயே போயிடும்..” என்றெல்லாம் பயமுறுத்திவிட்டு, அவர்கள் இருவர் முகங்களிலும் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்தார்.
“ரத்தம் கட்டினதை மட்டும், அறுவை சிகிச்சை பண்ணி எடுத்துரலாம்.. பயப்பட வேணாம்.. சிம்பிள் சர்ஜரிதான்.. இருபத்திநாலு மணி நேரம் அவங்க இங்க இருக்கட்டும்..” என்று சொல்லிவிட்டார்.
மருத்துவர் சொன்ன முன்பணத்தை கட்டிவிட்டு, தேவையான மருந்துகளை வாங்கிக் கொடுத்துவிட்டு, வீடு திரும்பியபோது, பூர்ணிமா மிகவும் கலங்கிப் போயிருந்தாள்.
“என்னை நம்பி தாயம்மாவை அனுப்பியிருக்காங்க.. அவங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, என்னை எங்க வீட்ல பொரட்டி எடுத்துருவாங்க..” என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.
“நானும் அதையேதான் யோசிச்சிட்டிருந்தேன், பூர்ணா.. ஆஸ்பத்திரிலேருந்து அவங்க வந்ததும், கொண்டுபோய் கிராமத்துலயே விட்டுரலாம்.. முத்ரா காலிபண்ணிப் போற வரைக்கும் அவங்க வரவேணாம்..” என்றான், அருண், தோல்வியுற்ற குரலில்.
“அவசரப்பட்டு முத்ரா மேல புகார் கொடுத்துட்டோமோனு பயமா இருக்கு அருண்.. அவ நம்மை இன்னும் எப்படிலாம் பழிவாங்கப் போறாளோ..?”
“அவ பண்ணியிருக்கறது கிரிமினல் குற்றம்னு சாந்தாராம் சொன்னாரில்ல..? பயப்பட வேண்டியது நீயில்ல, அவ..” என்றான், அருண்.
“ஸ்டேஷன்ல வந்து இருபதாயிரம் குடுக்கச் சொன்னாரே, அந்த இன்ஸ்பெக்டர்... அவர் அவ பக்கமில்ல பேசுவாரு..?”
“இது சைபர் கிரைம். வேற ஒருத்தர் வருவாருனு நெனைக்கறேன்..”
* * *
மறுநாள் காலை போலீஸ் என்று எழுதாத வாகனம் ஒன்று வந்தது. அதிலிருந்து ஓர் அதிகாரி இறங்கினார்.
அருணிடம் பேசிவிட்டு மாடிக்குப் போனார். முத்ராவின் வீட்டுக் கதவைத் தட்டினார்.
கதவைத் திறந்த முத்ராவிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.
“என்ன மேட்டர் சார்..?” என்றாள், முத்ரா சற்றும் கலங்காமல்.
“கீழ் வீட்ல பூர்ணிமானு இருக்காங்களே, அவங்க உங்களைப் பத்தி ஒரு கம்ப்ளெயின்ட் குடுத்து இருக்காங்க..”
“வீடு காலி பண்ணலைன்னா..?”
“நோ, நோ.. இது சைபர் மேட்டர்மா.. அவங்க பெட்ரூம்ல நீங்க ரகசியமா கேமிரா வெச்சுப் படம்பிடிச்சு அவங்களை பிளாக்மெயில் பண்றீங்களாம்..?”
முத்ரா தன் முகத்தில் அதிர்ச்சி காட்டினாள்.
“அய்யோ, அந்த விவகாரம் அப்படிப் போகுதா..? அருண்கிட்ட விசாரிச்சீங்களா..?” என்று படபடப்புடன் கேட்டாள்.
“என்ன விசாரிக்கணும்..? புகார் கொடுக்கும்போது, அவரும்தான் கூட இருந்தாரு..”
“பாருங்களேன், அந்தாளு எப்படித் திட்டம் போட்டிருக்காருனு..! போட்டோ பிரேம்ல கேமிராவை ஒளிச்சு வெச்சு வீடியோ எடுத்ததே அருண்தான்.. அவருக்கும், அவர் மனைவிக்கும் ஒத்துப்போகல.. ஏதாவது செய்ஞ்சு விவாகரத்து வாங்கணும்னு அவர் செய்ஞ்ச வேலைதான் இது.. பூர்ணிமாவை மிரட்டச் சொல்லி என்கிட்ட உதவி கேட்டாரு.. மாட்டேன்னுதான் சொன்னேன்.. ஆனா, அவளைத் துரத்திட்டு, என் கூட வாழ ஆசைப்படறதா சொல்லி அவர் கெஞ்சினாரு.. நான் ஜஸ்ட் பூர்ணிமாவை மெரட்டினேன்.. அவ்வளவுதான். பொண்டாட்டிகிட்ட மாட்டினவுடனே, விஷயத்தை திசை திருப்பப் பார்க்கறாரு, இன்ஸ்பெக்டர்..”
முத்ரா அடித்துப் பேசப்பேச, அதிகாரிக்கு வியப்பாக இருந்தது.
“ஏம்மா, அவரே வீடியோ எடுத்து அவரையே மெரட்டிப்பாரா..? நம்பும்படியாவா இருக்கு..?”
“இன்னொரு உண்மையையும் நான் சொல்றேன், சார். வீடு கட்ட நிறைய கடன் வாங்கிட்டதால, அருணுக்கு பணத்தேவை அதிகமாயிருச்சு.. இந்த கேமிரா வெச்சது, போட்டோ எடுத்தது, வீடியோ எடுத்தது எல்லாமே அருண்தான்.. அதை வியாபாரம் பண்ணித் தரமுடியுமானு என்கிட்ட கேட்டார். அந்த மாதிரி வேலையெல்லாம் நான் செய்யறது இல்லனு சொல்லிட்டேன்.. அதுக்கப்புறம் பூர்ணிமாவை மெரட்டி அவங்க பொறந்த வீட்டுலேருந்து காசு வாங்க பிளான் போட்டாரு..”
“அப்படியா, உங்க போனைக் குடுங்க..”
“என் போன் எதுக்கு சார்..?”
“அட குடுங்க.. அன்லாக் பண்ணிக் குடுங்க..”
முத்ரா சிறு தயக்கத்துடன் தன்னுடைய போனை அவரிடம் நீட்டினாள்.
அதிகாரி அந்த போனில் வெவ்வேறு விதங்களில் முற்றிலுமாகப் பரிசோதனை செய்தார்.
“உங்க லேப்டாப், ஐபேடு எல்லாத்தையும் கொண்டுவாங்கம்மா..”
முத்ரா தன் மடிக்கணினியையும் கொண்டுவந்து கொடுத்தாள். அதிலும் பலவித பரிசோதனைகள் செய்தார், அதிகாரி. பின்னர், தன் போனில் அருணைக் கூப்பிட்டு மாடிக்கு வரச் சொன்னார்.
முத்ரா மாட்டியிருப்பாள் என்று மகிழ்ச்சியுடன் அருண் மாடியேறி வந்தான்.
“நீங்கதான் வீடியோ எடுத்தீங்கனு முத்ரா சொல்றாங்க..?”
அருண் அவளைப் பார்த்த பார்வையில் காழ்ப்பு இருந்தது.
“பச்சைப் பொய் சார்.. வீடியோ அவ போன்ல இருக்கா, என் போன்ல இருக்கானு நீங்களே செக் பண்ணிப்பாருங்க..”
“அருண், மாட்டினவுடனே பேச்சை மாத்தாதீங்க.. போலீஸ்கிட்ட பொய் சொல்லித் தப்பிக்க முடியாது.. ஆதாரம் இல்லாம நான் சொல்லலை..” என்று முத்ரா சற்றும் அயராமல் சொன்னாள்.
- தொடரும்